இலங்கை
Typography

குப்பைகளை சீராக அகற்றுவது தொடர்பில் சகல உள்ளுராட்சி நிறுவனங்களினதும் கழிவகற்றல் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக மாற்றக்கோரும் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு தொடக்கம் அமுலாகும் வகையில் விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 17வது சரத்திற்கு அமைய ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

குறித்த வர்த்மானி அறிவித்தலில்,

“1. எந்தவொரு உள்ளுராட்சி நிறுவனத்தாலும் முன்னெடுக்கப்படுகின்ற அல்லது பேணப்படுகின்ற கழிவகற்றல், சேகரித்தல், வாகனங்களில் கொண்டு செல்லல், தற்காலிகமாக சேர்த்து வைத்தல், பதப்படுத்தல் பிரித்தல், அப்புறப்படுத்தல் செயற்பாடுகளும் - வீதிகளில் உள்ள குப்பைகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளும் குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்குள் உள்ளடங்கும்.

2. ஒரு நபருக்கு அல்லது உடைமைக்கு பங்கம் ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொள்வதோ, அவதூறு ஏற்படுத்துவதோ, கழிவகற்றல் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடுவதோ, தாமதப்படுத்துவதோ குற்றச்செயலாகக் கருதப்படும். கழிவகற்றல் செயற்பாடுகளுக்கு எதிராக மக்களை தூண்டுவதும், அதற்குரிய சேவைகளை நடத்துவதற்கு தடை போடுவதும், அத்தகைய தொழிலில் இருந்து விலகுமாறு அழுத்தம் கொடுப்பதும் கூட சட்டவிரோதமானதாக பிரகடனப்படுத்தப்படும்.

3. இந்த சட்டத்தின் பிரகாரம் குற்றவாளியாக இனங்காணப்படும் எவரையும் பிடிவிறாந்து இல்லாமல் கைது செய்யும் அதிகாரம் பொலிசாருக்கு வழங்கப்பட உள்ளது. குற்றவாளியாக இனங்காணப்படும் நபருக்கு கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்படும். ” உள்ளிட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்