இலங்கை
Typography

ஏற்கனவே அத்தியாவசிய மருத்துப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ள நிலையில், உயர்தரத்திலுள்ள விலைகூடிய மருந்துகளின் விலைகளையும் விரைவில் குறைக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

வறிய மக்களின் சுகாதார நலன் கருதியே மருந்துகளின் விலைகள் பெருமளவு குறைக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதானிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று வியாழக்கிழமை காலை சந்தித்துப் பேசினார். இதன்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஔடத விலைகள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. எந்தவொரு அரசாங்கமும் செய்யாத ஒன்றை நாம் சாதித்துள்ளோம். எமது நாட்டில் கல்வி போன்றே சுகாதார சேவைகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன. ஆனால் அண்மைக்காலம் வரை வைத்தியசாலைகளில் மருந்து கிடையாது வசதிபடைத்தவர்கள் தனியார் மருத்துவமனைகளை நாடுகின்றனர். ஏழைகள் துன்பப்படுகின்றனர்.

சில மருந்துகள் யானை விலை குதிரை விலைபோன்று காணப்படுகின்றன. இந்த அநியாயத்துக்கு முடிவு கட்டும் வகையிலேயே மருந்துகளின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. எதிர்காலத்தில் மேலும் பல மருந்துகளின் விலைகளும் குறைக்கப்படவிருக்கின்றன.

அதுமட்டுமல்ல கண்களுக்கான விழித்திரை, கண் வில்லைகளின் விலைகள் மிக அதிகமாகக் காணப்படுவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்களின் உயிர்களுக்கு விலை பேசுபவர்களாக சிலர் காணப்படுகின்றனர். இவற்றுக்கு முற்றுப்புள்ளிவைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஏழை நோயாளிகளுக்குப் பாதிப்பில்லாத குறைந்த விலையில் இவற்றைப் பெற்றுக் கொடுப்பதே அரசின் நோக்கமாகும். கல்வி, சுகாதாரம் இரண்டிலும் கொள்ளையடிப்பதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்