இலங்கை
Typography

முல்லைத்தீவு வட்டுவாகலில் 617.331 ஏக்கர் காணிகளை கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிப்பதற்கு நேற்று புதன்கிழமை மேற்கொள்ளப்படவிருந்த நில அளவைப் பணி, பொது மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. 

காலை முதல் அங்கு கூடிய மக்கள், வட்டுவாகல் பாலத்தை அண்டிய பகுதியில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். இதனால், காணி அளவீடு செய்ய வந்த அளவீட்டாளர்கள் அளவீட்டை கைவிட்டுத் திரும்பிச் சென்றனர்.

புதன்கிழமை ஆரம்பிக்கப்படும் நில அளவை, 5ஆம் திகதி வரை தொடர்ந்து காலை முதல் மாலை வரை மேற்கொள்ளப்படும் என்றும், அந்தப் பகுதியிலுள்ள காணி உரிமையாளர்கள் யாராவது இருப்பின் அவர்கள் உரிய ஆவணங்களுடன் நில அளவை செய்யப்படும்போது அங்கு சமூகமளிக்குமாறு அரச நில அளவையாளர் பா.நவஜீவன் எழுத்து மூலம் அறிவித்திருந்தார். 

அதற்கமைய அங்குகூடிய மக்கள் தமது  எதிர்ப்பை  வெளிக்காட்டி நிலஅளவையாளர்களை பணி செய்யாமல் தடுத்தனர். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவப்பிரகாசம் சிவமோகன், செல்வம் அடைக்கலநாதன், சாந்தினி ஸ்ரீஸ்கந்தராசா, வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.அன்ரனி ஜெயநாதன், துரைராசா ரவிகரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS