இலங்கை
Typography

சீனாவின் பெரும் முதலீட்டோடு ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரத் திட்டம் இந்திய அழுத்தத்தினாலேயே இடைநிறுத்தப்பட்டிருந்ததாக இலங்கை அரசாங்கம் முதற்தடைவையாக ஒப்புக்கொண்டுள்ளது.  

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில், அதாவது, 2014ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட துறைமுக நகரத் திட்டம், 2015ஆம் ஆண்டு, மார்ச் முதல் வாரத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு ஒரு வாரம் முன்னதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்டது.

வெளிநாட்டு அழுத்தங்களினால் இந்தத் திட்டம் இடைநிறுத்தப்படவில்லை என்றும், உடன்பாட்டில் உள்ள குறைபாடுகள் மற்றும் சுற்றாடல் காரணிகளைக் கருத்தில் கொண்டே இந்த திட்டம் இடைநிறுத்தப்பட்டதாகவும் அரசாங்கம் அப்போது கூறியிருந்தது.

எனினும், பாதுகாப்புச் செயலராகப் பதவியில் இருந்த போது, புதுடெல்லிக்கு அழைக்கப்பட்ட தன்னிடம், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்படும்  கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை கைவிடுமாறு அழுத்தம் கொடுத்திருந்தார் என்று கோத்தாபய ராஜபக்ஷ அப்போது கூறியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. 

இதனிடையே, கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தினைத் தொடர்வதற்கு தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS