இலங்கை
Typography

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, சந்திரிக்கா குமாரதுங்க பண்டாரநாயக்க ஆகியோரை ஒரே மேடையில் இணைக்க வேண்டும் என்று மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இனி பலிக்காத கனவுகள் போன்றதே என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

ஆயினும், மூன்று பேரவையும் இணைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இன்னமும் பலமுள்ள சக்தியாக மாற்றும் முயற்சிகள் முடங்கிப் போகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த அமரவீர மேலும் கூறியுள்ளதாவது, “நாம் பொறுத்தது போதும். தீர்மானம் எடுப்பதற்கு இதுவே சரியான தருணம், எனினும் இத்தீர்மானத்தால் கட்சி பிரிவடைந்து விடக்கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே நாம் உள்ளோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் சுதந்திரக் கட்சியை பிரிக்க வேண்டுமென்ற எண்ணம் நிச்சயமாக இருக்காது. என்றபோதும் அவருடன் இருக்கும் கோஷ்டியினரின் அழுத்தங்களால் அவர் கட்டுப்பட்டுள்ளார். இக்கும்பல் எரிச்சல் மற்றும் குரோத மனப்பான்மைக் கொண்டது.

இவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாடம் புகட்டுவதற்காக சுதந்திரக் கட்சியில் இருந்தபடி அரசாங்கத்துடன் இணைவதற்காக டீல் போட்டிருந்தார்கள். ஆறு அமைச்சர் பதவிகள், இரண்டு இராஜாங்க அமைச்சர் பதவிகள் மற்றும் 03 பிரதி அமைச்சர் பதவிகளே அவர்களது ‘டீல்’ ஆகும். இதனுடன் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை அம்பலப்படுத்துவதற்கு நான் விரும்பவில்லை. எமக்கு கட்சி முக்கியத்துவம் என்கின்றபோதும் அரசாங்கம், நாட்டின் அபிவிருத்தி ஆகியவற்றை கருத்திற்கொண்டு எமது கட்சியின் மத்திய செயற்குழு அதனை மறுத்துவிட்டது.

ராஜபக்ஷக்கள் மீதான எமது கௌரவம் இன்னமும் குறையவில்லை. குறிப்பாக நாட்டில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த மஹிந்த ராஜபக்ஷவை நான் இன்னும் மதிக்கிறேன். சிவப்பு கம்பளத்தில் நடந்து சென்று ஒரு ராஜாவைப் போல இருந்தவரை இந்த கோஷ்டி தமது சுய இலாபத்துக்காக கொளுத்தும் வெயிலில் வீதிதோறும் நடக்கவைத்துள்ளது. இவர்களை சுதந்திரக் கட்சியிலிருந்து விலக்குவது இலகுவான விடயம் என்கின்றபோதும் நாம் அதை செய்ய விரும்பவில்லை. கட்சியை ஒன்று சேர்க்கும் முயற்சியினை நாம் இன்னும் கைவிடவில்லை.” என்றுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்