இலங்கை
Typography

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு, தனது அறிக்கையில் இரு அமைச்சர்களை பதவி நீக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. 

கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா மற்றும் விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, கூட்டுறவு மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோரையே பதவி விலகவேண்டும் என்று அந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

வடக்கு மாகாண சபையின் நாளைய (செவ்வாய்க்கிழமை) அமர்வின்போது விசாரணைக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஓய்வுபெற்ற நீதிபதிகளான எஸ்.தியாகேந்திரன், எஸ்.பரமராஜா மற்றும் ஓய்வு பெற்ற மாவட்டச் செயலர் செ.பத்மநாதன் ஆகியோர் அந்த விசாரணைக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இந்தக் குழு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது பணியை ஆரம்பித்தது. அதன் இறுதி அறிக்கை கடந்த மே மாதம் 19ஆம் திகதி முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

விசாரணை அறிக்கை 82 பக்கங்களைக் கொண்டுள்ளது. முழுமையாகத் தமிழ் மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது. விசாரணைக் குழுவிற்கு வழங்கப்பட்ட ஆணை, விதிமுறை, அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள், கண்டறிவுகள், பரிந்துரைகள் அல்லது விதப்புரைகள், நன்றியுரை என்ற கட்டமைப்பில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்