இலங்கை
Typography

இன, மத குரோத உணர்வைத் தூண்டி குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான மலிக் சமரவீக்கிரம விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் நல்லிணக்க வேலைத்திட்டங்களை சீர்குலைப்பதற்கு அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து கட்சி கவனம் செலுத்தியுள்ளது.

ஆரம்பத்தில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சி ஐக்கியத்தை வலுவூட்டி மதம் சாராத ஒரு கட்சியாக செயற்பட்டு வருகின்றது. உண்மையான இலங்கையின் அடையாளத்தை கட்டியெழுப்ப கட்சி அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

மதங்கள் மற்றும் இனங்களுக்கு இடையில் பதற்றத்தையும் குரோதத்தையும் ஏற்படுத்தி அரசாங்கத்தின் நல்லிணக்க வேலைத்திட்டங்களுக்கு தடங்கலை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர்.

இவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவது சம்பந்தமாக அண்மையில் பிரதமர் மற்றும் ஜனாதிபதியினால் அமைச்சரவையில் கூட்டாக முன்வைக்கப்பட்ட அறிவித்தலை ஏற்றுக்கொள்ளுகிறது.

இன நல்லிணக்கம், சமய ஐக்கியம், மற்றும் சட்டவாட்சியை உறுதிப்படுத்தும் விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒருபோதும் இரண்டு விதமான கருத்துக்கள் இருந்ததில்லை. குரோதத்தை வளர்த்து குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வலியுறுத்துகின்றோம்.” என்றுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்