இலங்கை
Typography

பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியின் கொழும்புக் கிளையானது கடந்த 75 வருடங்களுக்கு மேலாக அதற்குரிய சுயாதீன யாப்புடன் கிட்டத்தட்ட 750 உறுப்பினர்களுடன் இயங்கி வருகிறது. ஹார்ட்லி கல்லூரியின் பழைய மாணவர்கள் கடின உழைப்பினால் பல துறைகளிலும் உயர்ந்த நிலையை அடைந்து கல்லூரியின் நற்பெயரை தொடர்ந்து பேணி வருகிறார்கள் .

சமுதாய மருத்துவ நிபுணராக கடமை ஆற்றி வரும் நான் கொழும்புக் கிளையின் நிர்வாக சபை உறுப்பினராகவும் பிரதி தலைவராகவும் பல வருடங்களாக செயல்பட்டுள்ள நிலையில் ஹார்ட்லி கல்லூரியில் மாணவர்களுக்கு உதவும் முகமாக வருடந்தோறும் சதுரங்கப் பயிற்சி பட்டறைகளையும் உயிரியல் விளக்க வகுப்புகளையும் ஒரு சேவையாக நடாத்தி வருகிறேன்.

கடந்த சில வருடங்களாக கொழும்புக் கிளையில் பதவியில் உள்ளவர்கள் யாப்பு விதிகளை மீறி சட்டவிரோதமாகவும் பழைய மாணவர் சங்கத்தை அரசியல் இலாபம் ஈட்டும் நோக்கத்துடனும் பயன்படுத்தி சுயநலமாக செயல்ப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு யாப்பு விதிகளுக்கு அமைய இயங்குமாறு என்னாலும் ஏனைய சிரேஷ்ட உறுப்பினர்களினாலும் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு செவிடன் காதில் ஊதிய சங்காகிய நிலையில் இறுதிக் கட்ட நடவடிக்கையாக யாப்பு விதிகளை அமூல் படுத்தவும் நல்லாட்சியைக் கொண்டுவரும் முகமாகவும் நீதிமன்ற இடையீட்டைக் கோரும் நிலைமை ஏற்பட்டது. 27.07.2016 சக பழைய மாணவர்களின் ஒத்துழைப்புடன் நான் தாக்கல் செய்த மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் விசாரணை செய்து ஹார்ட்லி கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் வருடாந்தப் பொதுக் கூட்டத்தை 28.07.2016 அன்று நடத்துவதை தடை செய்து உத்தரவிட்டதுடன் மேலதிக விசாரணைகளை 10.08.2016க்கு ஒத்திவைத்துள்ளது.இது தொடர்பாக மேலதிக விளக்கம் அளிக்கும் வகையில் ஹார்ட்லி கல்லூரியின் கொழும்புக் கிளையில் இடம் பெற்று வரும் சட்டவிரோத நடவடிக்கைகளை உங்களுடைய கவனத்துக்கு சமர்ப்பிக்கிறேன்

1. ஜனநாயக உரிமை மறுப்பு: பொதுவான உறுப்பினர்களின் நிர்வாக சபைக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் உரிமையை மறுத்தல் 

யாப்பு விதிகளுக்கு முரணாக 29. 06.2016 நிர்வாக சபைக்கான வேட்பு மனுக்கள் முடிவு செய்யப்பட்ட பின்னரே 28.07.16 வருடாந்த பொதுக் கூட்டத்தை நடத்துவதற்கான கடிதங்கள் உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டன. யாப்பு விதிகளின் படி முதலில் செயலாளர் நிர்வாக சபையில் உள்ள பதவிகளுக்கு விண்ணப்பங்களை வெளிப்படையாக கோரவேண்டும். ஹார்ட்லி கல்லூரியின் எந்த ஒரு கிளையிலும் 3 வருடங்களுக்கு மேலாக உறுப்பினராக இருந்த எவரும் வருடாந்தப் பொதுக் கூட்டத்துக்கு 2 வாரம் முன்னதாக வேட்பு மனுவை தாக்கல் செய்ய முடியும். அதன்பின்னரே நிர்வாக சபை வருடாந்த பொதுக் கூட்டத்துக்கு ஒரு வாரம் முன்பாக தகுதி வாய்ந்த வேட்பு மனுக்களை முடிவு செய்ய வேண்டும். ஆனால் தற்போதுள்ள செயலாளர் நிர்வாக சபை பதவிகளுக்கு வெளிப்படையாக ஒரு போதும் விண்ணப்பங்களைக் கோருவதில்லை. இவருடைய இந்த சட்டவிரோத நடவடிக்கையினால் நிர்வாக சபையில் இல்லாத உறுப்பினர்கள் நிர்வாக சபையினுள் வருவது தடை செய்யப் படுவதுடன் அவர்களுடைய ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகிறது. இதன் மூலமாக நிர்வாக சபை உறுப்பினர்கள் போட்டியின்றி மீண்டும் தெரிவு செய்யப்படுவதற்கு வழி ஏற்படுகிறது . 

நிர்வாக சபையில் பெரும்பான்மையோர் தொடர்ச்சியாக 2 வருடங்கள் அல்லது அதற்கு மேலாக பல வருடங்களாக தொடர்ந்து பதவியில் நீடித்து வருகின்றனர். இம்முறை பழைய மாணவர் சங்கத்தின் சரித்திரத்தில் முன்னொருபோதும் இல்லாத வகையில் தலைவர் ஏனைய உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்காமல் மூன்றாவது வருடமாகவும் தனது பதவியில் நீடிப்பதற்கு முயன்று வருகிறார். இவர் முந்திய தலைவருக்கு இரண்டாவது சந்தர்ப்பம் வழங்காது அனைவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப் படவேண்டும் என்று கூறி பதவிக்கு வந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. 11.07.2016 அன்று யாப்பு விதிகளின் படி வருடாந்தப் பொதுக் கூட்டத்துக்கு 2 வாரம் முன்னரே அனுப்பப்பட்ட எனது தலைவர் பதவிக்கான வேட்பு மனு எந்தக் காரணமும் காட்டப் படாமல் நிராகரிக்கப் பட்டது. எந்த ஒரு ஜனநாயக அமைப்பிலும் காணப்படும் அடிப்படை உரிமையாகிய அனைத்து உறுப்பினர்களுக்கும் நிர்வாக சபையில் உள்ள பதவிகளை வகிக்கும் உரிமையை மறுக்கும் குறைந்த பட்சம் வேட்பு மனு தாக்கல் செய்வதை அனுமதிக்காத சட்டவிரோத சதி செயல்களையும் அராஜகப் போக்கையும் எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும் ? இவ்வாறு நடப்பது கல்லூரிக்கு நற்பெயர் சேர்க்குமா என்பதை அனைத்து உறுப்பினர்களும் சிந்தித்து பார்க்க வேண்டும்.

2. சட்டவிரோதமான மோசடிக் கணக்கு வழக்குகள்

மேலும் சங்கத்தின் வரவு செலவுக் கணக்கு விபரங்கள் யாப்பின்படி ஒரு மாதம் முன்னராகவே உறுப்பினர்களுக்கு கிடைக்க வேண்டும். இவ்வாறு முன்னரே அனுப்பாமல் வருடாந்தப் பொதுக் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது 8-10 பக்கங்கள் கொண்ட கணக்கு வழக்கை சமர்ப்பித்து உறுப்பினர்கள் அதை சரியாக வாசிக்க முன்னரே அதை அங்கீகரிக்குமாறு கோருவது திட்டமிட்ட மோசடி ஆகும். உதாரணமாக சில மாதங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட ஒருநாள் மருத்துவ முகாமுக்கான செலவு சரியாக ஒரு இலட்சம் ரூபாய்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையான செலவு எவ்வாறு சரியாக ஒரு இலட்சம் ரூபாயாக இருக்கும் என்பதற்கு அப்பால் பங்கு பற்றிய மருத்துவர்கள் அனைவரும் தமது சேவைகளை இலவசமாக வழங்கியுள்ள நிலையில் ஒரு நாள் மருத்துவ முகாமுக்கு ஒரு இலட்சம் ரூபாய்கள் என்பது மிகவும் அதிகமாக ஏற்றுக் கொள்ள முடியாத செலவாக உள்ளது. நான் யாழ் மருத்துவ சங்கத்தின் தலைவராக இருந்த போதும் வேறு சந்தர்ப்பங்களிலும் பல இலவச மருத்துவ முகாம்களை நடாத்தி இருக்கிறேன் . பொதுவாக 10 தொடக்கம் 20 ஆயிரமே இதற்காக செலவாகும். இவை எல்லாவற்றையும் விட மிகப் பெரிய சட்டவிரோத மோசடியானது பழைய மாணவர் சங்க உறுப்பினர் ஒருவரைக் கொண்டே கணக்காய்வு (audit ) செய்வது ஆகும். கணக்காய்வு சட்டப்படி சங்கத்தின் உறுப்பினர் அல்லாத ஒருவரினால் நல முரண்பாடு (conflict of interest ) எதுவும் அற்ற நிலையில் சுயாதீனமாக செய்யப் படவேண்டும்.

3. ஒழுங்கற்ற சட்ட விரோத நிர்வாக சபைக் கூட்டங்கள்

நிர்வாக சபைக் கூட்டங்கள் செயலாளரினால் யாப்பு விதிகளுக்கு அமைய 2 வாரங்களுக்கு முன்னதாகவே அனைத்து நிர்வாக சபை உறுப்பினர்களுக்கு அறிவிக்கப் படவேண்டும். முன் கூட்டியே ஒரு சிலருடன் திட்டமிட்டுவிட்டு 3 தினங்களுக்கு முன்னர் ஏனையோருக்கு நிர்வாக சபைக் கூட்டம் இடம் பெறும் என அறிவிப்பது என்னைப் போன்ற பல வேலைகளில் ஈடுபட்டுள்ளவர்களை வராமல் பண்ணுவதற்குரிய கபட நாடகமாகும். பல சந்தர்ப்பங்களில் உரிய கடந்த கூட்ட நடவடிக்கைக் குறிப்புகளும் நிகழ்ச்சி நிரலும் முன் கூட்டியே அனுப்பப் படவில்லை.

4. பழைய மாணவர்களைக் கௌரவிக்காமை

வருடாந்த பொதுக் கூட்டத்துக்கு கல்வியினாலும் கடின உழைப்பினாலும் வாழ்க்கையில் உயர்ந்த பழைய மாணவர்களை விருந்தினராக கௌரவிப்பது உயர்நிலை அடைந்த பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கத்தின் வழக்கம் ஆகும். இந்த வழக்கமே பாடசாலை மாணவர்களையும் கனிஷ்ட பழைய மாணவர்களையும் மேலும் உயர் நிலையை அடைய ஊக்குவிக்கும் . ஆனால் ஹார்ட்லி பழைய மாணவர் சங்கம் கடந்த 2 வருடங்களாக எந்த பழைய மாணவரையும் கௌரவிக்காமல் இருப்பதுடன் பழைய மாணவர் அல்லாத ஒரு அரசியல்வாதியை கௌரவிப்பதன் மூலம் மாணவர்களை கல்வி கடின உழைப்பு இன்றி குறுக்கு வழியில் முன்னேறும் பாதையில் செல்ல ஊக்குவிக்கிறது.

5. அரசியல் மயப் படுத்துதல்

உலகத் தமிழர்கள் அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப் பட்ட ஆயிரக் கணக்கான அப்பாவித் தமிழர் படுகொலையை நினைவு கூரும் கறுப்பு ஜூலையை அனுஷ்டிக்கும் போது அதே ஜூலை மாதத்திலேயே அதிகளவு தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட கொழும்பு மண்ணிலே இன்றுவரை ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த எவருமே இந்தப் படுகொலை தொடர்பாக மன்னிப்பு கேட்காத நிலையில் ஹார்ட்லி கல்லூரிக்கு ஒரு பஸ் வண்டி கிடைத்ததற்காக பிரதமருக்கு பாராட்டு விழா எடுப்பது என்பது எவ்வளவு தூரம் பொருத்தமானது என்பதை ஒவ்வொரு தமிழரும் சிந்தித்து பார்க்கவேண்டும். 83 இனப் படுகொலையின் பின்னர் தமிழரின் முதுகெலும்பான கல்வியை வழங்கும் நூலக எரிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கையிலேயே தலை சிறந்த ஒரு கல்லூரி நூலகமாக இருந்த ஹார்ட்லி கல்லூரி நூலகம் 1984 இல் எரிக்கப் பட்டதும் இன்று வரை இந்த நூலகம் பழைய நிலைக்கு நிகராக கட்டி எழுப்பப் படவில்லை என்பதையும் இந்த இடத்திலே குறிப்பிட்டாக வேண்டும். இலங்கையில் கல்வி நிலையில் தலை சிறந்த பாடசாலைகள் பல சொந்தமாக பஸ் வண்டியைக் கொண்டிராத நிலையில் ஹார்ட்லி கல்லூரிக்கு பஸ் எந்த நோக்கத்தில் வழங்கப் படுகிறது என்பதையும் ஆராய வேண்டி இருக்கிறது. மேலும் பஸ் வண்டியை வழங்கிய காரணத்தினால் பிரதமரை ஹார்ட்லி பழைய மாணவர்கள் கௌரவித்தார்கள் என்று வைத்துக் கொண்டாலும் அமைச்சர் சுவாமிநாதன் போன்ற ஹார்ட்லியுடன் தொடர்பில்லாத ஐக்கிய தேசியக் கட்சி பிரமுகர்கள் ஏன் இந்த பாராட்டு விழாவுக்கு அழைக்கப் படவேண்டும்?

ஹார்ட்லியின் நண்பர்களே! மேலே நான் குறிப்பிட்டிருக்கும் சட்ட விரோத நடவடிக்கைகளும் அரசியல் சூழ்ச்சிகளும் பாடசாலைக்கு நற் பெயருக்கும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கும் உதவப் போகின்றதா ? நான் இந்த வழக்கை வைப்பதற்கு முன்னர் இதை சிரேஷ்ட உறுப்பினர்களின் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயன்றேன். எனது நண்பரும் தற்போதைய தலைவரின் நெருங்கிய உறவினருமான திரு ராஜசிங்கம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முயன்றபோது, ஹார்ட்லி கல்லூரி மின்னஞ்சல் பதில்கள் வேலை நேரத்தில் அனுப்பப் பட்டிருக்கிறது என்றும் ஹார்ட்லி கல்லூரி நிகழ்வில் சிங்களத்தில் தேசிய கீதம் பாடுவதை ஆட்சேபித்து நான் அனுப்பிய மின்னஞ்சல் கைவசம் இருப்பதாகவும் தெரிவித்து இதன் மூலமாக என்னை பதவி நீக்க முடியும் என்று பயமுறுத்தி இருந்தார் தலைவர். இப்படிப் பட்டவரை தொடர்ந்து தலைவராக வைத்திருக்க வேண்டுமா?

இத்தகைய சூழ்நிலையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி பழைய மாணவர் சங்கத்தை யாப்பின் படி இயங்கவும் பாடசாலையின் நற்பெயரைக் காக்கவும் எனது செயல்பாடுகளுக்கு ஆதரவு நல்குமாறு அனைவரையும் நட்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி

வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன்

(குறிப்பு: வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதனின் இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பிரதிவாதிகள் தரப்பு பதிலளித்தால், அதனையும் வெளியிடுவோம்: ஆசிரியர் குழு 4tamilmedia.com)

BLOG COMMENTS POWERED BY DISQUS