இலங்கை
Typography

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில், ஏழு எதிரிகளுக்கு எதிராக சந்தேகத்துக்கு அப்பால் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், இரு எதிரிகளுக்கு எதிராக சாட்சியங்கள் ஏதுமில்லை என்றும் நீதிமன்றத் தீர்ப்பாய (ரயல் அட் பார்) நீதிபதிகள் முன்னிலையில் பிரதி சொலிசிட்டர் குமார் ரட்ணம் தெரிவித்துள்ளார். 

1ஆம் மற்றும் 7ஆம் எதிரிகள் சார்பாக சாட்சியங்கள் எதுவுமில்லை. 2,3,4,5,6,8,9ஆம் எதிரிகளின் குற்றச்சாட்டுக்கள், சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கூட்டுவன்புணர்வு படுகொலை வழக்கின் விசாரணைகள் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பா.சசிமகேந்திரன் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பாயத்தின் முன்னிலையில் கடந்த 3 மாதங்களாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. விசாரணையின் இறுதியாக சட்டத்தரணிகளின் தொகுப்புரைக்காக தீர்ப்பாயம் நேற்று செவ்வாய்க்கிழமை கூடியது.

முதலில் வழக்குத் தொடுநர் சார்பாக பிரதி சொலிசிட்டர் குமார் ரட்ணம் தனது சமர்பணத்தினை ஆரம்பித்தார்.

புங்குடுதீவு கிராமத்தில் நடந்த குற்றச்செயல் தொடர்பாக சட்டமா அதிபரின் சிபார்சுக்கு அமைவாக பிரதம நீதியரசரினால் நீதிமன்ற தீர்ப்பாயம் நியமிக்கப்பட்டு, அதன் மூலம் மூன்று நீதிபதிகள் நியமிக்கப்பட்டு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வருகின்றது. குற்றப்பகிர்வு பத்திரத்தில் 9 எதிரிகள் மீது 41 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 43 சாட்சியங்கள், 27 சான்றுப்பொருட்கள் மீதான தொகுப்புரையின் சமர்ப்பணத்தை நீதிமன்றத்தில் முன்வைத்தார்.

தொகுப்புரையின் இறுதியில், 1 மற்றும் 7 ஆம் எதிரிகள் மீதான குற்றச்சாட்டின் சாட்சியங்கள் இல்லை என்றும் 2,3,4,5,6, 8 மற்றும் 9 ஆம் எதிரிகளின் மீதான கடத்தல் மற்றும் கற்பழிப்புக் குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு அப்பால் நிர்ரூபிக்கப்பட்டுள்ளதாக பிரதி சொலிஸ்டர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, எதிரிகள் சார்பான சட்டத்தரணிகள் தீர்ப்பாயத்தின் முன்னிலையில் தொகுப்புரையின் சமர்ப்பணத்தை அளிப்பதற்காக இன்று புதன்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

Most Read