இலங்கை
Typography

இராணுவத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளின் உடல்நிலை தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சு ஆராயவுள்ளதாகவும், அதற்காக தகவல்களைத் திரட்டி வருவதாகவும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் போராளிகளுக்கு மெல்லக் கொல்லும் விச ஊசிகள் ஏற்றப்பட்டுள்ளதாகவும், அதனால், பலர் உயிரிழந்துள்ளதாகவும் தொடர்ச்சியாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இந்த விடயம் தொடர்பில் முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்குப் பதிலளித்த அவர், “முற்றிலும் தெரியாமல் தகவல்களை கூறுவது தவறானது. முன்னாள் போராளிகளின் விடயத்தினை அரசாங்கம் நிராகரித்து வருகின்றது.  அந்த வகையில், முன்னாள் போராளிகளின் தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. முன்னாள் போராளிகள் எப்போது இணைந்து கொண்டார்கள். எவ்வளவு காலம் புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்டார்கள் என்ன நடந்தது என்பது குறித்து வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் அதிகாரிகள் பரிசோதனை செய்து வருகின்றார்கள். 

உடனடியாக எந்த கருத்துக்களையும் கூற முடியாமல் இருக்கின்றது. அவ்வாறு நடந்திருந்தால் மிகப் பாரதூரமான விடயம். இந்த விடயத்தினை சர்வதேச மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டிய ஒரு கடப்பாடு எமக்கு இருக்கின்றது.  அந்தப் பிரச்சினைக்குரிய அடிப்படைகளை ஆராய வேண்டிய சூழ்நிலையும் தற்போது எழுந்துள்ளதனால், தீர்க்கமான கருத்துக்களை தர முடியாமல் இருக்கின்றது.” என்றுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்