இலங்கை
Typography

வடக்கு- கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாகவே தொடர வேண்டும். எந்தவொரு காரணம் கொண்டும் அவை மீளவும் இணைக்கப்படக் கூடாது என்று கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தினால் பிரகடனமொன்று வெளியிடப்பட்டுள்ளது. 

அத்தோடு, சமஷ்டி அதிகாரப் பரவலாக்க முறைமை முஸ்லிம் மக்களுக்கு பாதிப்பானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் மக்கள் பேரவை வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இணைந்த சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி 24 மணி நேரத்திற்குள் கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புகளின் சம்மேளனம் இந்த பிரகடனத்தை தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது.

கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த முஸ்லிம் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கல்முனையில் நேற்று திங்கட்கிழமை ஒன்றுகூடி தங்களின் இந்தப் பிரகடனத்தை உள்நாட்டு மற்றும் சர்வதேச சமூகங்களிடம் முன் வைக்க முடிவு செய்துள்ளனர்.

ஒற்றையாட்சி முறையிலான அதிகாரப் பகிர்வு, தற்போதுள்ள ஜனாதிபதி முறை ஆகியனவும் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பாக அந்த பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அந்தப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

1. வடக்கு - கிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் ஒரு போதும் விரும்பவில்லை. அந்த இணைப்பு முஸ்லிம்களை சிறுபான்மை இனமாக்கும். இன ரீதியான அநீதிக்குள்ளாக்கும். 

2. முஸ்லிம்கள் தனித்துவமான ஒரு தேசிய இனம். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தனித்துவமான அடையாளத்தை கொண்டுள்ளனர். மட்டுமன்றி சுய நிர்ணய உரித்துடையவர்களாகவும் இருப்பதால் அவர்களை ஒரு தேசிய இனமாக உறுதிப்படுத்த வேண்டியது தவிர்க்க முடியாதது.

3. முஸ்லிம்களுக்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட உயிர், உடமைகளின் இழப்புக்களின் அடிப்படையில் ஒற்றையாட்சியே அவர்கள் விரும்புகின்றார்கள். சமஷ்டியை தங்களுக்கு பாதகமாகவே கருகின்றார்கள்.

4. தற்போதைய ஜனாதிபதி முறைமை தொடர்ந்தும் இருக்க வேண்டும். அத்தோடு, தமிழ் - முஸ்லிம் விவகாரங்களை கையாளக் கூடிய அதிகாரம் கொண்ட இரு துணை ஜனாதிபதிகள் இடம்பெறுவதை அரசியல் யாப்பு உறுதி செய்ய வேண்டும்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்