இலங்கை
Typography

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்துக்கு உட்பட்ட 2008ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் இடம்பெற்ற பிணை முறி விநியோக மோசடிகள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

“மத்திய வங்கியின் நிதிச் சபையின் அனுமதி இல்லாமல் இடம்பெற்ற இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் குறித்து, முன்னாள் நிதி அமைச்சர் (மஹிந்த ராஜபக்ஷ) பாராளுமன்றத்துக்கு பதில் கூற வேண்டும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திறைசேரி முறி விநியோகத்தினால் வட்டிவீதம் அதிகரிக்கப்பட்டிருப்பதாக முன்னெடுக்கப்படும் பிரசாரங்களில் எந்தவிதமான உண்மையும் இல்லை. கடந்த ஆட்சியில் இடம்பெற்ற தவறுகள் யாவும் மறைக்கப்பட்டது போன்று, நாம் தவறுகளை மறைத்து சட்டத்தின் ஆட்சியை நசுக்கத் தயாராகவில்லை என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

பிணை முறி விநியோக சர்ச்சை குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் விசாரிப்பதற்கு பாராளுமன்றம் நேற்று புதன்கிழமை விசேடமாகக் கூடியது. இதன்போது விசேட அறிக்கையை முன்வைத்து உரையாற்றும்போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்மவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “2008ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் இடம்பெற்ற பிணைமுறி வழங்கல்களில் எந்த ஒழுங்கு முறையும் பின்பற்றப்படவில்லை. இக்காலத்தில் 5147 பில்லியன் ரூபாவுக்கு பிணைமுறிகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் 4702 பில்லியன் ரூபா பெறுமதியான பிணைமுறிகள் தனி நேரடிமுறைக்கு வழங்கப்பட்டுள்ளன. இக்காலப் பகுதியில் 90 வீதமான பிணைமுறிகள் தனிநேரடி முறையூடாகவே வழங்கப்பட்டன. அது மாத்திரமன்றி மத்திய வங்கியின் நிதிச் சபையின் அனுமதி இன்றியே இவை விநியோகிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் பாராளுமன்றத்துக்கு பதில் கூறவேண்டும். நாட்டு மக்களும், மக்களின் பிரதிநிதிகளும் இந்த இரகசியத்தை அறிந்துகொள்ள வேண்டும்.

முன்னைய ஆட்சிக் காலத்தின் மோசடிகள் மூடி மறைத்து சட்டவாட்சியை குழிதோண்டி புதைப்பதற்கு நாம் தயாராக இல்லை. முன்னாள் நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு பதில் கூற வேண்டும். இது தொடர்பாக துரித விசாரணை நடத்தி குற்றவாளிகளைத் தண்டிப்போம்.

பிணைமுறி தொடர்பான வாதப்பிரதிவாதம் 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்டது. இதுகுறித்து மேலதிக கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்கு சட்டத்தரணி காமினி பிட்டிபன தலைமையில் குழுவொன்றை நியமித்தேன். அந்த குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் முன்வைத்து விவாதம் நடத்தினோம். அதன்பின்னர் மேலதிக விசாரணைக்காக இதன் நடவடிக்கைகள் கோப் குழுவுக்கு வழங்கினோம். கோப்குழு தனது விரிவான விசாரணையை ஆரம்பித்து அதன் அறிக்கையை 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது. இதற்கான விவாதமும் நடத்தப்பட்டது. இதன்போது கோப்குழுவின் அறிக்கையையும் அதனுடன் இணைந்த கணக்காய்வாளர் நாயகத்தின் விசேட அறிக்கையையும் நான் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் அனுப்பினேன்.

பிணை முறி கொடுக்கல் வாங்கலில் மோசடி நடந்துள்ளதா? அர்ஜூன் மகேந்திரன் பொறுப்பு கூற வேண்டுமா? அப்படியாயின் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா? என கடிதம் மூலம் சட்டமா அதிபரிடம் கோரினேன். இதன்பின்னர் சட்ட மா அதிபர் கோரும் அனைத்து ஆவணங்களை வழங்குமாறு பாராளுமன்ற செயலாளருக்கு அறிவித்தேன். இந்நிலையில் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் சட்டதரணிகள் குழுவொன்று அமைக்கப்பட்டு தற்போதும் அதன் விசாரணைகள் நடந்தவண்ணமுள்ளன.

ஊழியர் சேமலாப நிதியத்திலும் மோசடி நடைபெற்றுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கோரியதன் பிரகாரம் சட்டமா அதிபரின் யோசனையை பெற்று அதற்கான விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் மத்திய வங்கி ஆளுநருக்கு உத்தரவிட்டேன். இது தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு அதன் அறிக்கை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் கணக்காய்வாளர் நாயத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியில் நட்டம் ஏற்பட்டுள்ளதா என்பதனை ஆராய்ந்து பார்க்குமாறு உலக வங்கியிடமும் சர்வதேச நாணய நிதியத்திடமும் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தேன். பிணைமுறி வழங்கலின் போது காணப்படும் சந்தை நிலவரத்தின் பிரகாரமே இலாபம் மற்றும் நட்டத்தை தீர்மானிக்க முடியும் என்றும் பிணைமுறி நட்டத்தை நிர்ணயிப்பதற்கான சர்வதேசத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட செயல்முறை தம்மிடம் கிடையாது என மேற்குறித்த இரு நிறுவனங்களும் கூறின. எனவே 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் இது தொடர்பான உரிய நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துள்ளோம். எமது செயற்பாடுகளையும் ஆதாரங்களையும் பாராளுமன்றத்திற்கும் கோப்குழுவிற்கும் சட்ட மாஅதிபருக்கும் ஆற்றுப்படுத்தியுள்ளோம்.

அதன்பின்னர் ஜனாதிபதியினாலும் விசேட ஆணைகுழுவொன்று நியமிக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் திகதி நிதி சபையினால் பேர்பச்சுவல் ட்ரஸ்ட் நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடு விதித்ததுடன் அந்நிறுவனத்திற்கான நிதி பயன்பாட்டிற்கும் தடை விதிக்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் தடை செய்தோம். அந்த தடையை மேலும் 6 மாதத்திற்கு நீடித்தோம்.

இதன்படி அந்த நிறுவனத்தின் கணக்கில் உள்ள 12 பில்லியன் ரூபா மத்திய வங்கியின் சேமிப்பில் உள்ளது. ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம் பிணைமுறி மோசடியினால் 11 பில்லியன் நட்டம் அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அப்படியாயின் சட்டமா அதிபர் இது தொடர்பாக தனது காரணங்களையும் ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் ஆற்றுப்படுத்தி வழக்கு தாக்கல் செய்தால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நட்டத்தை ஈடு செய்வதற்கு அந்த பணத்தை எமக்கு மீளபெற்றுக்கொள்ள முடியும்.

இலங்கை வரலாற்றில் பாரியளவிலான மோசடிகள் தொடர்பான விசாரணைகள் பக்கசார்பின்றியும் துரிதமாகவும் முன்னெடுக்கப்பட்டமை இதுவே முதற்தடவையாகும். இது நல்லாட்சி அரசாங்கத்தின் பாரிய வெற்றியாகும்.

பத்து வருடங்களுக்கு நிதி தொடர்பான அதிகாரம் பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கொடுக்கல் வாங்கல்கள் எதுவும் பாராளுமன்றத்திற்கு வெளியிடப்படவில்லை. எனினும் இதனை நாம் மாற்றியமைத்தோம்.

அதேபோன்று 2008ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரைக்குமான பிணைமுறி வழங்கலின் மோசடிகள் குறித்தும் விசாரிக்குமாறு ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.இதன்படி குறித்த காலப்பகுதியில் நடந்த மோசடிகளை துரித கதியில் விசாரணை செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை விடுத்துள்ளேன். இதன் ஊடாக துரித விசாரணைகள் நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்குவோம்.

2008 ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரை நேரடியாகவே பிணைமுறி வழங்கப்பட்டுள்ளது. இந்த செயல்முறையில் எந்தவொரு ஒழுங்கும் இருக்கவில்லை. இந்த காலப்பகுதியில் 5147 பில்லியன் ரூபா பிணைமுறி வழங்கப்பட்டுள்ளதுடன் அதில் 4702 பில்லியன் ரூபா தனி நேரடி முறைமை மூலமாக பிணைமுறி விடுக்கப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் 90 வீதமான பிணைமுறி தனி நேரடி முறைமை மூலமே பிணைமுறி வழங்கப்பட்டுள்ளது. இவை நிதி சபையின் அனுமதியில்லாமலே முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக மத்திய வங்கி சார்பாக இருந்த முன்னாள் நிதி அமைச்சர் பாராளுமன்றத்திற்கு பதில் கூற வேண்டும். நாட்டு மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் இந்தஇரகசியத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

பாராளுமன்றத்தின் நிதி பலத்தை அதிகரிக்கவே எமது அரசாங்கம் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது. 2008 முதல் 2014 வரையான பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு அரச நிதி குழுவின் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன். குறித்த காலப்பகுதியின் மத்திய வங்கி கணக்கறிக்கையை அப்போதைய கோப்குழு ஏற்றுக்கொண்டமை ஆச்சரியத்தை

ஏற்படுத்தியுள்ளது. தற்போது பிணைமுறி மோசடி தொடர்பான வாதம் அரசியலாக மாறி போலியான வதந்திகள் பரப்பட்டு வருகின்றன. இதனை நம்பிக்கை கொள்ளாமல் உண்மையை

கண்டறிவோம். புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த நானும் ஜனாதிபதியும் அர்ப்பனிப்புடன் செயற்பட்டு வருகின்றோம். இது எமக்கு புதிய அனுபவமாகும். இது கட்சி வாதம் புரிவோரால் புரிந்துக்கொள்ள முடியாத செயற்படாகும். இதன்போது தப்பு தவறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அதனை நாம்

திருத்திக்கொள்ள வேண்டும். எனினும் முன்னைய ஆட்சி காலத்தின் மோசடிகள் மூடி மறைத்து சட்டவாட்சியை குழித்தோண்டி புதைப்பதற்கு தயாராக இல்லை. கடன் சுமையும் நீதி நிலைநாட்டப்படாத ஊழல் மோசடிமிக்க நாட்டையே பொறுப்பேற்றோம். நாடு தற்பொழுது சரியான பாதையில் பயணிக்கத் தொடங்கியிருப்பதுடன், நீதியான சமூகத்தை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்