உலகம்
Typography

இன்று ஞாயிற்றுக்கிழமை சரட்டோவ் ஏர்லைன்ஸால் இயக்கப் படும் ஒரு பயணிகள் விமானம் ரஷ்யாவின் மாஸ்கோவுக்கு அருகே கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 71 பேரும் பலியாகி உள்ளதாக அஞ்சப் படுகின்றது.

இத்தகவலை ரஷ்ய செய்தி ஊடகமான இண்டெர்ஃபாக்ஸ் உடனடியாக உறுதி செய்துள்ளது.

TASS இன் அறிக்கைப் படி மாஸ்கோவின் டொமொடேடொவோ விமான நிலையத்தில் இருந்து இந்த விமானம் புறப்பட்டு 10 நிமிடங்களில் ரேடாரில் இருந்து மாயமானதுடன் பின்னதாக விபத்தில் சிக்கியதாகவும் இதன் போது அந்த விமானத்தில் 65 பயணிகளும் 6 குழு உறுப்பினர்களும் இருந்ததாகவும் தெரிய வருகின்றது. Antonov An-148 என்ற இந்த விமானம் உள்நாட்டின் Saratov Airlines இனால் இயக்கப் படும் விமானம் ஆகும். இது ஊரல் மலைப் பகுதியில் உள்ள ஓர்ஸ்க் என்ற நகருக்கு புறப்பட்டுச் செல்கையில் மாஸ்கோ புறநகர்ப் பகுதியில் உள்ள ராமென்ஸ்கி என்ற மாவட்டத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

மேலும் ரஷ்ய ஊடகங்களின் தகவல் படி வானில் இருந்து விமானத்தின் எரிந்த பாகங்கள் கீழே வீழ்வதை பல பொது மக்கள் பார்த்துள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் இன்னமும் தெரிய வரவில்லை. எனினும் ரஷ்ய போக்குவரத்துத் துறை அமைச்சின் தகவல் படி இந்த விபத்துக்கு காலநிலை நிபந்தனைகள் அல்லது பைலட்டின் தவறு காரணமாக இருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதேவேளை நேற்று சனிக்கிழமை அமெரிக்காவின் அரிஷோனா மாநிலத்திலுள்ள கிராண்ட் கேன்யோன் என்ற பகுதியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று விபத்தில் சிக்கியதில் குறைந்தது 3 பேர் கொல்லப் பட்டும் மேலும் 4 பேர் காயம் அடைந்தும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்