உலகம்
Typography

இன்று ஞாயிற்றுக்கிழமை ஜப்பான் மக்கள், சுமார் 18 000 பொது மக்களின் உயிரைக் காவு கொண்ட 2011 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் திகதி தாக்கிய மிக மோசமான சுனாமி அனர்த்தத்தின் 7 ஆம் ஆண்டு நினைவை அனுசரிக்கின்றனர்.

ஜப்பானின் வடகிழக்குக் கடற்கரையோரமாகத் தாக்கியிருந்த இந்த சுனாமி மூலம் ஃபுக்குஷிமா என்ற நகரில் உள்ள அணு உலை சேதமடைந்து அணுக்கதிர் வீச்சு அபாயமும் பாரியளவில் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

சுமார் 9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நேரமான பிற்பகல் 2:46 pm இற்கு கடற்கரைப் பகுதிகளில் கூடிய பொது மக்கள் இந்த அனர்த்தத்தில் பலியான தமது உறவுகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர். இதே நேரம் தான் 7 ஆண்டுகளுக்கு முன்னர் தடுப்புச் சுவர்களை உடைத்துக் கொண்டு முன்னேறிய சுனாமி அலைகள் கட்டடங்களையும் வாகனங்களையும் அடித்துச் சென்றது. அத்தோடு நின்று விடாது கடலோரமாக இருந்த ஃபுக்குஷிமா அணு உலையின் சக்தி வழங்களைச் சேதமடையைச் செய்தது. இந்த சுனாமியால் டை இச்சி அணு உலையின் 3 ரியாக்டர்கள் சேதமடைந்து கதிர் வீச்சு அபாயம் ஏற்பட்டது.

டோக்கியோவில் நடைபெற்ற இன்றைய உத்தியோகபூர்வ நினைவு கூரலின் போது ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபே உரையாற்றுகையில் ஃபுக்குஷிமா பகுதியில் பழுது பார்க்கும் பணிகள் மிகுந்த உத்வேகத்துடன் நடந்து வருவதாகத் தெரிவித்தார். ஆனாலும் இன்னமும் சுமார் 70 000 பேருக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் ஃபுக்குஷிமா பகுதியிலுள்ள தமது இல்லங்களுக்குத் திரும்ப முடியாத சூழலில் உள்ளனர்.

இந்நிலையில் இன்றைய நினைவு தினத்தில் மத்திய டோக்கியோவிலுள்ள ஹிபியா பூங்காவில் ஓர் நினைவு மண்டபம் அமைக்கப் பட்டு அங்கு அமைதிப் பிரார்த்தனையும் மலர் வளையங்கள் வைத்து கண்ணீர் அஞ்சலியும் செலுத்தப் பட்டது. மேலும் அணுக் கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்ட ஃபுக்குஷிமா அணு உலைப் பகுதியில் தூய்மைப் படுத்தும் பணி மிகச் சவாலானது என்றும் அது நிறைவு பெற இன்னமும் 30 தொடக்கம் 40 ஆண்டுகள் வரை எடுக்கலாம் எனவும் கணிப்பிடப் பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்