உலகம்
Typography

உலகின் முன்னணி சமூக வலைத் தளமான ஃபேஸ்புக் தகவல் திருட்டில் ஈடுபடுவதாக வெளியான தகவல்களை அடுத்து பங்குச் சந்தையில் ஃபேஸ்புக் கடும் சரிவைச் சந்தித்துள்ளது.

2016 இல் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக்கின் Psychographic Modeling Technique என்ற தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி 5 கோடி வாக்காளர்கள் தகவல்களை கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா என்ற நிறுவனம் திருடியுள்ளது.

இத்தகவலை பிரிட்டனின் சேனல் நியூஸ் 4 என்ற செய்தி ஊடகம் வெளியிட்டதை அடுத்தே ஃபேஸ்புக் விவகாரம் சூடு பிடித்துள்ளது. முக்கியமாக இந்தத் தகவல் திருட்டை தனது தேர்தல் பிரச்சாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பயன்படுத்திக் கொண்டதாக வெளியான தகவலால் ஒரே நாளில் பல அமெரிக்கர்களின் நன்மதிப்பை ஃபேஸ்புக் இழந்துள்ளது. இது மாத்திரமல்லாது இத்தகவல் வெளியான ஒரே நாளில் பங்குச் சந்தையில் ஃபேஸ்புக் இன் இலாபம் பல மில்லியன் டாலர்களுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத 7% வீத சரிவு இதுவாகும். இவ்விவகாரம் காரணமாக கேம்ப்ரிட்ஜ் அனாலிடிக் நிறுவன தலைமை அலுவலர் அலெக்சாண்டர் நிக்ஸ் இடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார். மறுபுறம் வாட்ஸ் ஆப் செயலியின் இணை நிறுவனரான ஆக்டன் என்பவரும் ஃபேஸ்புக் தகவல் திருட்டில் ஈடுபடுகின்றது என்றும் அதிலுள்ள கணக்கை அழித்து விட வேண்டிய தருணம் இது என்றும் தகவல் பதிவு செய்துள்ளதாலும் பிரச்சினை பெரிதாகியுள்ளது.

இந்நிலையில் தாம் தகவல் திருட்டில் ஈடுபடவில்லை என்றும் மக்களின் தனிப்பட்ட விபரங்களைப் பாதுகாக்க நாங்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம் என்றும் இதனை விரைவில் உறுதி செய்வோம் எனவும் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதைவிட அமெரிக்க செனட் சபை ஃபேஸ்புக் ஸ்தாபகர் மற்றும் இயக்குனரான மார்க் ஷூக்கெர்பேர்க் தனது சுமார் 200 கோடி பயனாளிகளின் அந்தரங்கத் தகவல்களை ஃபேஸ்புக் நிறுவனம் எவ்வாறு பாதுகாக்கின்றது என எதிர்வரும் மார்ச் 26 ஆம் திகதிக்குள் நேரடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

மக்களுக்கு ஃபேஸ்புக் தகவல் பரிமாற்றங்கள் மூலம் அவர்களது நிலைப்பாட்டை அறிந்து அதன் மூலம் அவர்களுக்கு மூளைச் சலைவை செய்து முக்கிய தேர்தல் முடிவுகளிலேயே ஜனநாயகத்துக்கு விரோதமான மாற்றத்தை ஏற்படுத்தும் செயற்பாட்டை அரசியல் வாதிகள் செய்ய முடிகின்றது எனின் அதற்கு வழிகோலும் பட்சத்தில் ஃபேஸ்புக் மற்றும் கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிக்கா நிறுவனம் ஆகியவை நிச்சயம் மனித உரிமை மீறலில் ஈடுபடவில்லை என்று சொல்ல முடியாது.

பேஸ்புக் கணக்கை அழித்து விடுங்கள் பிரபலமாகிய இணையச் சொல் #deletefacebook

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்