உலகம்
Typography

அண்மையில் அமெரிக்க அதிபர் தேர்தல் உட்பட முக்கிய அரசியல் நிகழ்வுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் விதத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிக்கா என்ற அரசியல் தகவல் ஆய்வு நிலையத்துடன் சேர்ந்து செயற்பட்டதாகக் கடும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் பெரும் சர்ச்சையில் சிக்கிய ஃபேஸ்புக்கின் பங்குகள் பங்குச் சந்தையில் கடும் சரிவைச் சந்தித்தன.

இது தவிர ஃபேஸ்புக் நிறுவனர் இது தொடர்பில் நேரடி விளக்கம் அளிக்க வேண்டுமென அமெரிக்க செனட் சபையும் நிர்ப்பந்தித்தது. அதன் அடிப்படையில் சி என் என் ஊடகத்துக்கு நேரடியாகத் தொடர்பு கொண்டு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கர்பர்க் மன்னிப்புக் கோரியுள்ளார். அவர் அளித்த பேட்டியின் சுருக்கம் கீழே:

'கடந்த காலத்தில் அனலிட்டிக்கா நிறுவனத்துடன் இணைந்து செயற்பட்டதில் தவறுகள் நடந்துள்ளதை ஒப்புக் கொள்கின்றேன். அதற்காக மன்னிப்பும் கோருகின்றேன். இனிமேல் இது போன்ற தவறு நடைபெறாது பார்த்துக் கொள்கின்றோம். அடுத்த நவம்பரில் அமெரிக்காவில் நடைபெறும் தேர்தலில் தலையிட மாட்டோம். அது போல் தற்போது குற்றம் சாட்டப் பட்டு வரும் இந்தியா மற்றும் பிரேசில் உட்பட எந்த நாடுகளினதும் பொதுத் தேர்தல்களோ அல்லது அதிபர் தேர்தல்களிலோ நாம் தலையிட மாட்டோம். இதற்காக எந்தவொரு நிறுவனத்துடனும் கூட்டு வைத்துக் கொள்ள மாட்டோம். மேலும் ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கும் எந்தவொரு நபரினதும் தனிப்பட்ட விபரங்களும் கசியாது முன்பை விட அதி கவனத்துடன் பாதுகாப்போம்.'

இவ்வாறு அவர் தெரிவித்தார். இதேவேளை மார்க் ஸுக்கர்பர்க் நேரடியாக மன்னிப்புக் கோரிய பின்னரும் இன்னமும் தொடர்ந்து ஃபேஸ்புக் பங்குகள் சரிவிலேயே இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்