உலகம்
Typography

இனிமேல் வெளிநாட்டவர் எவரேனும் அமெரிக்காவுக்கு விசா பெற வேண்டுமெனில் அவர்களின் தனிப்பட்ட சமூக ஊடகங்களான ஃபேஸ்புக், டுவிட்டர் உட்பட ஏனையவற்றின் விபரங்களையும் வரலாற்றையும் கூட சமர்ப்பிப்பது அவசியம் என்று சட்டம் கொண்டு வர அமெரிக்க அரசுத்துறை பரிந்துரை செய்துள்ளது.

இந்த விபரங்களில் குறைந்த பட்சம் கடந்த 5 வருட சமூக ஊடகப் பகிர்வு வரலாறு பெறப்படுவது என்றும் முடிவெடுக்கப் பட்டுள்ளது.

அமெரிக்க அரசின் இம்முடிவால் வருடத்துக்கு 14.7 மில்லியன் மக்கள் கடுமையாகப் பாதிக்கப் படுவார்கள் என்று கணிக்கப் பட்டுள்ளது. முக்கியமாக விண்ணப்பதாரர்களிடம் அவர்கள் கடந்த 5 ஆண்டுகளில் உபயோகித்த தொலைபேசி எண்கள், மின்னஞ்ச முகவரிகள் மற்றும் பயண விபரங்கள் போன்ற சொந்தத் தகவல்களும் பெறப்படவுள்ளது. இதில் முக்கியமாக குறித்த நபர்கள் முன்பு ஏதேனும் ஒரு நாட்டில் இருந்து வெளியேற்றப் பட்டார்களா மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு தீவிரவாதத் தொடர்பு இருக்கின்றதா என்பது குறித்தும் துலாவி அறியப் படும் என எதிர் பார்க்கப் படுகின்றது.

அமெரிக்காவுக்குச் செல்ல சிறப்பு விசா பெற வேண்டும் என்ற நடைமுறை பிரிட்டன், கனடா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகளுக்கு இல்லை என்பதால் அவர்களுக்குப் பாதிப்பு இல்லை என்ற போதும் விடுமுறைக்காகவோ வேலை நிமித்தமாகவோ அமெரிக்க செல்ல விண்ணப்பிக்கும் இந்தியா, சீனா மற்றும் மெக்ஸிக்கோ போன்ற நாடுகளுக்கு இந்த சட்டத்தால் கடும் சிரமம் ஏற்படவுள்ளது.

தீவிரவாதத்தைக் கட்டுப் படுத்தும் நோக்கில் தான் டிரம்ப் நிர்வாகம் இவ்வாறு நிலமையைக் கடுமையாக்கத் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பொதுவாகவே மனிதர்களின் பேச்சுரிமை பாதிக்கப் படும் என்றும் சமூக ஊடகங்களில் பதிவுடும் தகவல்களைத் அரச அதிகாரிகள் தவறாகவோ அச்சுறுத்தலாகவோ புரிந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது என்பதால் இதற்கு அமெரிக்காவின் சிவில் உரிமைகள் யூனியனிடம் இருந்தே கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்