உலகம்
Typography

மியான்மாரில் இன அழிப்பில் இருந்து தப்பிப்பதற்காக அங்கிருந்து வெளியேறி பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ள சுமார் 7 இலட்சம் அகதிகளில் தனது முதல் அகதிக் குடும்பத்தை தாய்நாட்டுக்கு மீள அழைத்திருப்பதாக மியான்மார் அரசு அறிவித்துள்ளது.

ஆனால் இந்த நடவடிக்கை குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள மனித உரிமைகள் அமைப்பு அகதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யாது வெறும் விளம்பரத்துக்காகத் தான் மியான்மார் அரசு இவ்வாறு செய்துள்ளது என்று புகார் அளித்துள்ளது.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் மியான்மாரின் வடக்கு ராக்கைன் மாநிலத்தில் போலிசாராலும் இராணுவத்தாலும் கட்டவிழ்த்து விடப் பட்ட வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள், பாலியல் வன்புணர்வு போன்றவற்றில் இருந்து தப்பிக்கப் பல ஆயிரக் கணக்கான மக்கள் வெளியேறி மியான்மாரின் அடிப்படை வசதிகள் மிகக் குறைந்த அகதிப் பாசறைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் ஐ.நா இன் இனவழிப்பு குற்றச்சாட்டை மறுத்துள்ள மியான்மார் அரசு சிறுபான்மை முஸ்லிம் இனத்தவரான றோஹிங்கியாக்களின் போராளிகள் மீது மாத்திரமே தான் தாக்குதல் தொடுக்கப் பட்டது என்று கூறியிருந்தது.

இதை அடுத்து வங்க தேசம் மற்றும் ஐ.நா இன் அழுத்தத்துக்கு மத்தியில் பங்களாதேஷும் மியான்மாரும் அகதிகளை மீளப் பெறும் நடவடிக்கைகள் குறித்து விவாதித்த போதும் இதுவரை இதற்கான ஆயத்தப் பணிகளைத் தாமதம் செய்தே வந்தன. இந்நிலையில் தான் சனிக்கிழமை அறிக்கை வெளியிட்டிருந்த மியான்மார் அரசு தனது நாட்டின் ராக்கைன் மாநிலத்தில் டௌங்பையோலெட்வெய் என்ற நகரில் புதிதாகக் கட்டப் பட்ட அடிப்படை வசதிகள் அடங்கிய அகதிகளை உள்வாங்கும் பாசறை ஒன்றில் தங்க வைக்கவென 5 உறுப்பினர்கள் அடங்கிய குடும்பத்தை மீள அழைத்திருந்ததாகத் தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த நடவடிக்கையில் பங்களாதேஷ் அரசு உத்தியோகபூர்வமாகப் பங்கேற்கவில்லை என்றும் ஏனெனில் இரு நாட்டுக்கும் இடையே சூனியப் பிரதேசத்தில் தான் குறித்த அகதிகள் பாசறை அடங்கியிருந்ததாக வங்கதேச அகதிகளுக்கான கமிசனர் மொஹம்மட் அப்துல் கலாம் AFP ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அகதிகளைத் தாய் நாட்டுக்கு மீள அழைக்கும் மியான்மாரின் நடவடிக்கை உண்மையில் இன்னமும் தொடங்கவில்லை என்றும் ஒரேயொரு குடும்பத்தை மாத்திரம் மீள அழைத்தது என்பது ஒரு அர்த்தபூர்வமான செயலாக ஆகாது என்றும் பங்களாதேஷின் உள்துறை அமைச்சர் அஸாடுஸ்மான் தெரிவித்துள்ளார். மேலும் உண்மையான மீள அழைத்தல் எப்போது தொடங்கும் எனத் தமக்கு இன்னமும் தெரியாது என்றும் அதற்கான நம்பிக்கையை மியான்மார் அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மியான்மாரின் றோஹிங்கியா அகதிகள் மிகவும் வலியுறுத்தும் தமக்கான அங்கீகாரமான குடியுரிமையைத் தான் மீளப் பெற்ற குடும்பத்துக்கு மியான்மார் அரசு வழங்கவில்லை என்றும் தேசிய அடையாள அட்டை ஒன்று மாத்திரமே அளிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. மறுபுறம் தமது உறவினர்களைக் கண் முன்னே பௌத்த பேரினவாதிகள் கொலை செய்ததைக் கண்டுற்ற பல ஆயிரக் கணக்கான றோஹிங்கியா அகதிகள் தாய்நாட்டுக்குத் திரும்ப அச்சம் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

ராக்கைன் மாநிலத்தில் வன்முறை கட்டவிழ்த்து விடப் பட்ட முதலாவது மாதத்தில் மாத்திரம் சுமார் 6700 றோஹிங்கியா அகதிகள் கொல்லப் பட்டதாக எல்லைகள் அற்ற மருத்துவர் குழு என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. இது தவிர வன்முறை பரவிய போது ராக்கைன் மாநிலத்தின் பல கிராமங்கள் தீயூட்டப் பட்டும் வீடுகள் புல்டோசர் மூலம் அளிக்கப் பட்டும் இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்