உலகம்
Typography

தென்சீனக் கடல் பிராந்தியத்தில் சீனா தனது கடற்படையை நிலை கொள்ளச் செய்து செயற்கைத் தீவுகளையும் கட்டமைத்து உலகளாவிய ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போது அப்பிராந்தியத்தில்  உள்ள இன்னொரு நாடானா வியட்நாம் தனது புதிய ராக்கெட்டு லாஞ்சர்களை அப்பகுதியை நோக்கி நகர்த்தியிருப்பதால் தென் சீனக் கடலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக சீனாவின் ஆதிக்கம் தொடர்பில் பிலிப்பைன்ஸ் தொடுத்த வழக்கில் சர்வதேச நீதிமன்றம் தென்சீனக் கடலில் சீனாவுக்கு எந்த உரிமையும் இல்லை எனத் தீர்ப்பு அளித்திருந்தது. ஆனால் அதையும் மீறி இப்பகுதியில் தான் அமைக்கவுள்ள செயற்கைத் தீவுகளில் விமான ஓடு பாதைகள்,  ரேடார் கண்காணிப்பு  மையங்கள் மற்றும் இராணுவ பாசறைகளைக் கட்டும் தீவிர நோக்கத்துடன் சீனா செயற்படத் தொடங்கியது.  இந்நிலையில் தென் சீனக் கடலில் போர் மூண்டால் சீனாவின் விமானங்களைத் தாக்கி அழிக்கக் கூடிய ராக்கெட்டு லாஞ்சர்களைத் தாம் இஸ்ரேலிடம் இருந்து பெற்றிருப்பதாக வியட்நாம் கூறியுள்ளது.

இதை விட ரஷ்ய அரசிடம் இருந்தும்  அதிநவீன 6 நீர்மூழ்கிக் கப்பல்களை வியட்நாம் வாங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தென் சீனக் கடலை சுற்றி உள்ள நாடுகளாகவும், அதை சொந்தம் கொண்டாடும் நாடுகளாகவும் வியட்நாம், சீனா மற்றும் தைவான் ஆகியவை விளங்குவதுடன் குறிப்பிட்ட சில பகுதிகளை பிலிப்பைன்ஸ், மலேசியா மற்றும் புரூனே ஆகிய நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS