உலகம்
Typography

வெனிசுலாவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீண்டும் அந்நாட்டு அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

வெனிசுலாவில் சமீப காலமாக கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வரும் அந்நாட்டு மக்கள் தொகையில் வெறும் 46% வீதமானவர்களே வாக்குப் பதிவு செய்துள்ளனர்.

90% வீதமான வாக்குகள் எண்ணப் பட்ட நிலையில் நிக்கோலஸ் மதுரோ 67.7% வீத வாக்குகளையும் ஃபால்கோன் 21.2% வீத வாக்குகளையும் சுவீகரித்துள்ளனர். இத்தேர்தல் முடிவுகளை நிராகரிப்பதாகக் கூறியுள்ள பிரதான எதிர்க்கட்சி வேட்பாளர் ஹென்றி ஃபால்கோன் தேர்தலில் கடும் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் வெனிசுலாவில் மீண்டும் புதிய தேர்தல்கள் நடத்தப் பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். ஏற்கனவே 2018 டிசம்பரில் நடத்தத் திட்டமிடப் பட்டிருந்த இத்தேர்தல் மதுரோ ஆதரவாளர்களின் மூலம் உருவாக்கப் பட்ட தேசிய அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் முன்பே நடத்தப் பட்டது குறிப்பிடத்தக்கது.

நிக்கோலஸ் மதுரோவின் ஐக்கிய சோசலிசக் கட்சி 1999 முதல் ஆட்சியில் உள்ளது. 2013 இல் அப்போதைய அதிபர் சாவேஸ் காலமானதை அடுத்து நிக்கோலஸ் மதுரோ புதிய அதிபராகப் பதவியேற்றிருந்தார். ஆயினும் கடந்த சில வருடங்களாக மதுரோவுக்கு எதிராக வெனிசுலாவில் போராட்டங்கள் நடத்தப் பட்டன. ஏப்பிரலில் ஏற்பட்ட கிளர்ச்சியில் 120 இற்கும் அதிகமான மக்கள் பலியாகி இருந்தனர். இதை அடுத்து மதுரோ பதவியை ராஜினாமா செய்து விட்டு பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க் கட்சிகள் வலியுறுத்தின.

இந்நிலையில் தான் சமீபத்தில் நடத்தப் பட்ட அதிபர் தேர்தலில் மதுரோவே எதிர்பாராத விதமாக மீண்டும் தேர்வாகி உள்ளார். மேலும் தனது வெற்றியைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் உரையாற்றிய மதுரோ தேர்தல் நியாயமாகவே நடத்தப் பட்டது என்றும் இது ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி என்றும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்