உலகம்
Typography

அண்மையில் ஃபேஸ்புக் வாயிலாக கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா என்ற நிறுவனம் தகவல்களைத் திருடி அமெரிக்க அதிபர் தேர்தல் உட்பட பல விடயங்களில் முறைகேடு செய்த குற்றம் அம்பலாமனதை அடுத்து ஃபேஸ்புக் மீதும் குறித்த நிறுவனம் மீதும் கடும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதைத் தொடர்ந்து கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிக்கா நிறுவனம் மூடப்பட்டதுடன் ஃபேஸ்புக் நிறுவனரான மார்க் ஸூக்கர்பெர்க் சி என் என் ஊடகம் வாயிலாக நேரில் மன்னிப்புக் கேட்டும் அமெரிக்கக் காங்கிரஸில் ஆஜராகி விளக்கம் அளித்து மன்னிப்புக் கேட்டும் இருந்தார்.

இந்தத் தகவல் திருட்டில் கிட்டத்தட்ட 5 கோடி பேரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப் பட்டதாகக் குற்றம் சாட்டப் பட்டதுடன் இதில் 30 இலட்சம் ஐரோப்பிய ஃபேஸ்புக் கணக்கானர்களின் தகவல்களும் கசிந்தது அண்மையில் கண்டறியப் பட்டது. இதனால் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் ஃபேஸ்புக் நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டது. இதைத் தொடர்ந்து ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க் ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் ஆஜராகி உறுப்பினர்களின் கேள்விக்குப் பதில் அளித்ததுடன் பயனாளர்களின் தகவல் திருடப் பட்டதை ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கேட்டுள்ளார். ஆனால் அமெரிக்க செனட்டை விட மிகவும் அதிக நெருக்கடியை ஐரோப்பிய நாடாளுமன்றம் ஸூக்கர்பெர்க் இற்கு அளித்ததுடன் கடினமான கேள்விகளையும் எழுப்பினர்.

செவ்வாய்க்கிழமை புருஸ்ஸெல்ஸில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஃபேஸ்புக்கின் நடப்பு அந்தரங்கக் கொள்கைகள் மற்றும் தகவல் பரிமாற்ற விதிகள் தொடர்பிலும் புதிய ஒழுங்குகள் தொடர்பில் விளக்கம் அளிக்கவும் கேட்கப் பட்டது. இதற்குப் பதில் அளித்த ஸூக்கர்பெர்க் தற்போது ஃபேஸ்புக் கம்பனி மிகவும் பெரிதாகவும் சக்தி வாய்ந்ததாகவும் வளர்ந்து விட்டதால் பல ஒழுங்குகள் கட்டுப்பாட்டை மீறிப் போய் விட்டதாகவும் தான் இதற்கு நிச்சயம் பொறுப்பேற்று விசாரணைகளை நிகழ்த்தித் திருத்தங்களை மேற் கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் வாட்ஸ் ஆப் செயலியின் தகவல்களை ஃபேஸ்புக் கையாண்ட விதம் காரணமாக ஐரோப்பிய யூனியன் அதன் மீது $122 மில்லியன் டாலர் அபராதம் விதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS