உலகம்
Typography

ஏர்பஸ் A330 ரகத்தைச் சேர்ந்த சவுதி ஏர்லைன்ஸின் பயணிகள் ஜெட் விமானம் மேற்கு செங்கடல் நகரான ஜெத்தாஹ் இல் அவசரமாகத் தறையிறக்கப் பட்டதில் 53 பயணிகள் காயம் அடைந்ததாக விமானத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளனர்.

இந்த விமானம் சவுதியின் மெதினா நகரில் இருந்து பங்களாதேஷின் டாக்கா நகரை நோக்கி 151 பயணிகளுடன் புறப்பட்டது.

இதன் போது அதன் ஹைட்ரோலிக் பொறிமுறையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஜெத்தாஹ் இற்குத் திசை திருப்பப் பட்டு அவசரமாகத் தறை இறக்கப் பட்டதாக சவுதி விமானத்துறை விசாரைணைப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் இவ்விமானம் தரை இறக்கப் பட்ட போது அதன் ஒரு சக்கரம் செயற்பட மறுத்ததால் தரையை உரசிக் கொண்டு தீப்பிளம்புடன் சென்ற இதன் மூக்குப் பகுதி ஒரு கம்பத்துடன் மோதி ஓய்வுக்கு வந்தது. இதை அடுத்து அனைத்துப் பயணிகளும் அவசர காலக் கதவுகள் மூலம் உடனடியாக வெளியேற்றப் பட்டனர். இதன் போது 52 பேருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டது. ஒரு பெண் பயணிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

தற்போது இந்த விபத்து குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன. விமானம் இறங்கும் போது வெடித்து விபத்து ஏற்படாது இருக்க அதன் எரிபொருள் அனைத்தும் தீர்க்கப் பட வேண்டும் என்பதால் ஜெத்தாஹ் விமான நிலையத்தின் மீது பல மணித்தியாலங்களாக இந்த விமானத்தை விமானிகள் வட்டமடிக்கச் செய்தனர். மேலும் இதன் முன்புற லேண்டிங் கியர் செயற்பட மறுத்த போதும் விமானத்தின் கேப்டன் சாமர்த்தியமாக அவசர கால லேண்டிங் செய்து பயணிகளின் உயிரைக் காத்துள்ளார். சவுதி அரேபியாவில் மிகவும் தரமான முறையில் விமான சேவைகள் கண்காணிக்கப் படுவதால் அங்கு விமான விபத்துக்கள் ஏறும் போதோ அல்லது தரை இறங்கும் போதோ ஏற்படுவது குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS