உலகம்

ஓமனில் மெகுனு புயல் காரணமாக மேக வெடிப்பு என்ற சம்பவம் இடம்பெற்று கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு சராசரியாகப் பெய்ய வேண்டிய மழை வீழ்ச்சி ஒரே நாளில் ஏற்பட்டுள்ளது.

அதாவது மழை மிகவும் அடர்த்தியாக அருவி கொட்டுவது போல் பொழிந்துள்ளது. அண்மைய வரலாற்றில் இடம்பெறாத இந்த மிகப் பெரிய அனர்த்ததால் அங்கு பல சாலைகள் வெள்ளத்தில் சூழ்ந்து இலட்சக் கணக்கானவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.

மழை மற்றும் புயலுக்கு இதுவரை 15 பேர் பலி என அறிவிக்கப் பட்டுள்ளது. 45 பேர் காணாமற் போயுள்ளதாகவும் 2 இலட்சத்துக்கும் அதிகமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் இலட்சக் கணக்கானவர்கள் உணவுக்கும் குடிநீருக்கும் அல்லல் படும் நிலை தோன்றியிருப்பதாகவும் அனர்த்த முகாமை அமைப்பு அறிவித்துள்ளது. முக்கியமாக கடந்த 3 நாட்களாக சலாலா நகரில் மட்டும் 278.2 மிமீ மழை பெய்துள்ளது. 260 Km/h வேகத்தில் வீசிய புயல் மற்றும் மழைக்கு பல இடங்களில் மரங்கள் சாய்ந்தும், மின் கம்பங்கள் அறுந்தும் பாதைகளில் வெள்ளம் சூழ்ந்தும் உள்ளது. மழை எவ்வாறு மோசமாகப் பெய்துள்ளது என்பது தொடர்பில் சமூக வலைத் தளங்களில் வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.

இதேவேளை பசுபிக் சமுத்திரத்தின் மத்தியில் உள்ள ஹாவாய் தீவில் கிலாயூ எரிமலையின் சீற்றம் இன்னமும் அடங்கவில்லை. அங்கு பல சாலைகளை சுட்டெரித்துக் கொண்டு லாவா குழம்பு ஓடுவதையும் நெருப்புக் குழம்பின் கடும் வீரியத்தையும் படம் பிடித்து அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. கிலாயூ எரிமலை சீற்றத்தால் 2000 இற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். எரிமலை சீற்றம் காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை இன்னமும் திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.