உலகம்
Typography

பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதால் அதுவரைக்கும் இடைக்கால பிரதமராக முன்னால் தலைமை நீதிபதி நாசிர் உல் முல்க் என்பவர் நியமிக்கப் பட்டுள்ளார்.

இத்தகவலை பாகிஸ்தானின் பிரதமர் ஷாகித்கான் அப்பாஸி என்பவர் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் சமீப காலமாக பிரதமர் நியமனம் தொடர்பில் கடந்த சில வாரங்களாக நவாஸ் ஷெரீஃபின் முஸ்லிம் லீக் கட்சிக்கும் எதிர்க்கட்சியான மக்கள் கட்சியின் தலைவர் சையத் குர்ஷித் அகமது ஷா என்பவருக்கு இடையேயும் இடம்பெற்ற கடுமையான வாக்குவாதம் முடிவுக்கு வந்துள்ளது.

அதாவது இடைக்காலப் பிரதமராக முன்னால் நீதிபதியே நியமிக்கப் பட்டிருப்பதால் யாரும் குறை கூற முடியாது என அப்பாஸி கூறியுள்ளார். நாசிர் பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் இடைக்காலத் தலைவரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எதிர்வரும் வியாழக்கிழமை பாகிஸ்தானின் நாடாளுமன்றமும் தற்போதைய அரசும் கலைக்கப் படவுள்ளது.

தேர்தல் இடம்பெற்று புதிய அரசு பதவியேற்கும் வரை எந்தவித முக்கிய முடிவையும் இடைக்கால அரசு எடுக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் எதிர்வரும் ஜூலை 25 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS