உலகம்
Typography

1901 ஆம் ஆண்டு தொடங்கப் பட்ட நோபெல் பரிசு வழங்கும் திட்டம் உலகளாவிய ரீதியில் பெரும் பயன்களை விளைவிக்கும் தொழிநுட்பங்களை அல்லது கருவிகளைக் கண்டு பிடித்தவர்கள் மற்றும் சமூகத்துக்கு அரிய தொண்டாற்றியவர்கள் என இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், உயிரியல், பொருளியல் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் வழங்கப் பட்டு வருகின்றது.

நோபெல் பரிசு தான் இத்துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப் படும் உலகளவில் பெரிதும் மதிக்கப் படும் பரிசு ஆகும். இந்நிலையில் சமீபத்தில் நோபெல் தேர்வுக் குழுவுக்கு ஏற்பட்ட களங்கம் காரணமாக இலக்கியத்துக்கான நோபெல் பரிசு இவ்வருடமும் 2019 ஆம் ஆண்டும் வழங்கப் பட மாட்டாது என நோபெல் பரிசு அறக்கட்டளை இயக்குனர் லார்ஸ் ஹெய்கென்ஸ்டன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இலக்கியத்துக்கான நோபெல் பரிசை அறிவிக்கும் ஸ்வீடிஷ் அகாடமியின் தேர்வுக் குழு உறுப்பினர் காத்தீரனா பிராஸ்டென்சனின் கணவர் ஜீன் கிளாட் அர்னால்ட் என்பவர் மீது பாலியல் புகார் எழுந்தது. இதையடுத்து இவ்வருடத்துக்கான இலக்கியத்துக்கான நோபெல் பரிசு அறிவிக்கப் படாது எனத் தீர்மானிக்கப் பட்டது. அடுத்த ஆண்டுடன் சேர்த்து இதனை வழங்கவும் திட்டமிடப் பட்டது. ஆனாலும் இலக்கியப் படைகளுக்கான நோபெல் பரிசு தேர்வுக் குழுவில் இருந்து பல உறுப்பினர்கள் விலகிச் சென்றனர்.

இதனால் 2018 ஆம் ஆண்டு மாத்திரமன்றி 2019 ஆம் ஆண்டும் இலக்கியத்துக்கான நோபெல் பரிசு வழங்கப் படுவது கேள்விக் குறியாகி உள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS