உலகம்
Typography

ஞாயிற்றுக்கிழமை கடும் சீற்றத்துக்கு உள்ளாகி வெடித்துச் சிதறி வரும் கௌதமாலாவின் எரிமலை சீற்றத்துக்கு குறைந்தது 1.7 மில்லியன் பொது மக்கள் பாதிப்பு அடைந்துள்ளதுடன் 3000 பேருக்கும் அதிகமானவர்கள் வெளியேற்றப் பட்டும் உள்ளனர்.

மேலும் 73 பொது மக்கள் வரை உயிரிழந்துள்ளதாக இதுவரை கணிக்கப் பட்டுள்ளது. இதுதவிர இன்னமும் 200 பேர் வரை காணாமற் போயுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

எரிமலை வெடிப்பு அபாயத்தால் எஸ்குயிண்ட்லா என்ற நகரில் பொது மக்கள் மத்தியில் பதற்றமும் நெருக்கடியும் ஏற்பட்டதாகவும் ஆனால் பலர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மீட்புப் பணியில் இராணுவமும் ஏனைய குழுக்களும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த எரிமலை சீற்றத்தால் மலைப் பாங்கான கிராமங்களில் பல பொது மக்கள் பலியாகி இருக்கலாம் எனவும் இவர்களது சடலங்களை மீட்பதில் கடும் சிரமம் உள்ளது எனவும் இராணுவம் தெரிவித்துள்ளது. காயமடைந்த 46 பேரில் அரைப் பங்கினர் மோசமான நிலையில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை சீறத் தொடங்கிய 3763 மீட்டர் உயரமான இந்த எரிமலை தற்போது சேறு மற்றும் கரும் சாம்பல் புகையையும் பெருமளவில் கக்கி வருகின்றது. மேலும் ஆச்சரியத்துக்கு இடமாக லாவா குழம்பை விட மிக அதிக வீச்சில் கரும் சாம்பல் புகையையும் கற்களையும் இந்த எரிமலை வெளியிட்டு வருவதாக எரிமலை தொடர்பான கல்வியில் தேர்ச்சி பெற்ற டேவிட் றொத்தெரி என்பவர் தெரிவித்துள்ளார்.

கௌதமாலா அதிபர் ஜிம்மி மொராலெஸ் இந்த இயற்கை அனர்த்தத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு காரணமாக 3 நாட்களுக்குத் தேசிய துக்க தினத்தினை பிரகடனப் படுத்தியுள்ளார். மேலும் பாதிக்கப் பட்ட பகுதிகளில் நேரில் சென்று அவர் பார்வையிட்டுள்ளார். மேலும் ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ கட்டரஸ் உம் இந்த எரிமலை சீற்றத்தால் பலியானவரகளுக்கு இரங்கள் தெரிவித்ததுடன் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு கௌதமாலாவுக்கு எந்தவிதத்திலும் உதவ ஐ.நா தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இலண்டனில் உள்ள மாண்டரின் ஆரியெண்டல் ஹோட்டெலில் சமீபத்ஹ்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப் பட்டவர்கள் குறித்து உடனடித் தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில் தொடர்ந்து தீயை அணைக்கத் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். செவ்வாய்க்கிழமை சுமார் 12 மாடிகளும் 198 அறைகளும் கொண்ட இந்த ஹோட்டலில் ஏற்பட்ட தீயை அணைக்கத் தற்போது 100 தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். தீ விபத்து தொடர்பான புகைப் படங்களும் செய்திகளும் ஊடகங்களில் வெளியாகிய வண்ணம் உள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்