உலகம்
Typography

எதிர்வரும் ஜூன் 12 ஆம் திகதி நேரடியாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய அதிபர் கிம் உம் சிங்கப்பூரை வந்தடைந்துள்ளனர்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்புக்காக சிங்கப்பூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப் படுத்தப் பட்டுள்ளன.மேலும் இச்சந்திப்பே வடகொரியாவின் அணுவாயுத இலட்சியங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப் படுவதற்கான. மிக முக்கியமான சந்தர்ப்பமாகவும் கருதப் படுகின்றது. கனடாவில் இடம்பெற்றும் பெரும் குழப்பத்தில் முடிந்த G7 மாநாட்டில் பங்கு பற்றிய பின் விசேட விமானத்தில் சிங்கப்பூரினை வந்தடைந்த டொனால்ட் டிரம்பை சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் நேரில் சென்று வரவேற்றார்.

இதற்கு சில மணிநேரங்கள் முன்பாக சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தை சீனாவின் ஏர் சைனா வர்த்தக விமானத்தின் மூலம் வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் வந்தடைந்தார். 2011 இல் கிம் பதவியேற்ற பின் சர்வதேச நாடு ஒன்றிட்கு அவர் மேற்கொள்ளும் 3 ஆவது பயணமும் அவற்றில் மிக நீண்ட தூர பயணமும் இதுவாகும்.

அதிபர் டிரம்பின் அறிவுறுத்தலுக்கு அமைய கொரிய தீபகற்பத்தில் பூரண அணுவாயுத ஒழிப்புக்குத் தான் ஆதரவு தெரிவிப்பதாகக் கூறியிருந்த கிம் பதிலுக்கு என்ன எதிர்பார்க்கின்றார் என்பது தொடர்பில் இதுவரை கருத்துத்ச் தெரிவிக்கவில்லை. ஆனால் அணுவாயுதம் அற்ற கொரியா உருவாகப் பல வருடங்கள் எடுக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

டிரம்ப் மற்றும் கிம் இடையேயான சந்திப்புத் தொடர்பில் தகவல் திரட்ட இதுவரை 2500 ஊடகங்கள் தம்மை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளதாக சிங்கப்பூர் தகவல் தொடர்பு அமைச்சு அறிவித்துள்ளது. சிங்கப்பூரின் செந்தோசாத் தீவிலுள்ள கப்பெல்லா ஹோட்டலில் இவ்விரு தலைவர்களும் சந்திக்கவுள்ளனர்.
டிரம்ப் மற்றும் கிம் இடையேயான சந்திப்புக்கு சிங்கப்பூர் அரசுக்கு 11 மில்லியன் சிங்கப்பூர் டாலர்கள் செலவு ஏற்பட்டுள்ளதாகவும் கணிக்கப் பட்டுள்ளது.

இதேவேளை ரஷ்ய அதிபர் புதின் சிரிய அதிபர் அசாத்தினையும் வடகொரிய அதிபர் கிம் இனை பியாங்யாங்கிற்கு நேரில் சென்று சந்திப்பதற்கும் திட்டமிட்டுள்ளார் என வடகொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS