உலகம்
Typography

கனடாவின் கியூபெக் நகரில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை இடம்பெற்ற G7 மாநாடு டிரம்பின் அதிரடி செய்கைகளால் அமெரிக்காவுக்கும் பிற G7 நாடுகளுக்கும் இடையே மோதலில் முடிந்துள்ளது.

முன்னதாக சீனாவைப் போன்றே G7 உறுப்பு நாடுகளுக்கான இறக்குமதிப் பொருட்களுக்கான தீர்வை வரியையும் டிரம்ப் அதிகரித்திருந்தார். இதனால் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையேயும் வர்த்தகப் போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. எனவே இதற்கு ஏனைய G7 உறுப்பு நாடுகள் அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

இதனால் இவற்றிட்கும் அதிபர் டிரம்புக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. விளைவாக மாநாட்டின் இறுதியில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இருந்து விலகுவதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். இதன் பின் டிரம்ப் வெளியிட்ட டுவீட்டரில் இந்த மாநாட்டில் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மிகவும் பலவீனமாகவும் நேர்மையற்றும் நடந்து கொண்டதாகக் கருத்துத் தெரிவித்திருந்தார். இதற்குக் கனடா அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. மேலும் சர்வதேச அளவிலும் இது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

G7 மாநாட்டின் பின் செய்தியாளர்களிடம் ஜஸ்டின் ட்ரூடோ பேசிய போது இரும்பு மற்றும் அலுமினியம் இறக்குமதி மீதான அமெரிக்காவின் விலை நிர்ணயத்தை கண்டா ஜீரணிக்க முடியாது என்றும் இது எம்மை அவமதிக்கும் செயல் என்றும் சாடியிருந்தது தான் டிரம்பின் எதிர்மறை கருத்துக்குக் காரணமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை G7 மாநாட்டில் டிரம்ப் நடந்து கொண்ட விதம் மற்றும் கூட்டமைப்பின் முடிவுகளில் இருந்து வெளியேறியவை என்பன உண்மைக்கும் நம்பகத் தன்மைக்கும் எதிரான செயற்பாடு என பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS