உலகம்

செவ்வாய்க்கிழமை சிங்கப்பூரின் செந்தோசா தீவில் வடகொரிய அதிபர் கிம் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு முக்கிய பல ஒப்பந்தங்களுடன் இனிதே நிறைவுற்றுள்ளது.

கிட்டத்தட்ட 2500 இற்கும் அதிகமான ஊடகங்கள் இந்த சந்திப்பு தொடர்பில் தகவல் சேகரித்ததுடன் பல ஊடகங்கள் இதனை நேரில் ஒளிபரப்பு செய்தன.

இச்சந்திப்பு தனிப்பட நடந்த போதும் இரு தலைவர்களும் பின்னர் செய்தியாளர் மாநாட்டில் பங்கு பற்றினர். இதன் போது வெளியான முக்கிய தகவல்கள் சில கீழே,

1.முதலாவதாக டிரம்ப் வடகொரியாவில் பூரண அணுவாயுதப் பகிஷ்கரிப்பு இடம்பெறும் அல்லது அது தொடர்பில் கொரியா உத்தரவாதம் அளிக்கும் வரை அதன் மீதான பொருளாதாரத் தடைகள் தொடரும் என்றார்.
2.மனித உரிமைகள் தொடர்பில் சுருக்கமாக விவாதிக்கப் பட்டதுடன் வடகொரியாவில் இருந்து மிச்சமுள்ள அமெரிக்க இராணுவ வீரர்களை அமெரிக்க பெற்றுக் கொள்ள முடியுமெனவும் கிம் சம்மதித்துள்ளார்.
3.தமது இராணுவத் திறன்களை மட்டுப் படுத்த முடியாது என்ற போதும் தென்கொரியாவுடன் இராணுவ பயிற்சிகளைத் தேவைப் படின் நிறுத்துவோம் என டிரம்ப் தெரிவிப்பு
4.வடகொரியாவின் முக்கிய அணுவாயுத சோதனைத் தளத்தை அழிக்கத் தொடங்கி விட்டதாக கிம் தெரிவிப்பு
5.கிம் உடனான சந்திப்பு நேரடியாகவும், நேர்மையானதாகவும், ஆக்கபூர்வமானதாகவும் இருந்ததாக டிரம்ப் புகழாரம் சூட்டியதுடன் வெள்ளை மாளிகைக்கும் அழைப்பேன் என வாக்குறுதி

டிரம்பை முதலில் சந்தித்த போது கிம் தான் மிக மகிழ்ச்சியாக உணர்வதாகத் தெரிவித்த போதும் டிரம்ப் மற்றைய தலைவர்களுடன் கை குலுக்குவத விட மிகக் குறைவான நேரத்தில் அவர் கை குலுக்கி முடித்து விட்டார். மேலும் வடகொரிய அரச தொலைக் காட்சியில் இந்த இரு தலைவர்களது சந்திப்பு தொடர்பில் எந்த செய்தியும் வெளியாகவில்லை என அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சந்திப்பின் பின் இரு நாட்டு தலைவர்களுமே கடந்த காலத்தை விட இனி வரவிருக்கும் காலத்தில் வடகொரியாவுடனான மேற்குலக மற்றும் அமெரிக்க உறவு முன்னேற்றகரமானதாக இருக்கும் என ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர். டிரம்ப் மற்றும் கிம் இடையே வெற்றிகரமாக சந்திப்பு இடம்பெற்றதை அடுத்து வடகொரியாவுடன் தான் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துவது தொடர்பில் சீனா ஆராய்ந்து வருகின்றது.

இவ்விரு தலைவர்களது இந்த முக்கிய சந்திப்பு வருங்கால உலகின் அமைதிக்கு எந்தளவுக்குப் பங்களிப்புச் செய்யும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நன்றி : பிபிசி