உலகம்

பூமியின் தென் துருவத்தில் உள்ள அண்டார்டிகா கண்டம் பனிப்பாறைகளால் ஆனது. உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் வெப்பநிலையால் இப்பனிப்பாறைகள் மெல்ல மெல்ல உருகி வருகின்றன.

இந்நிலையில் சமீபத்திய ஆய்வின் படி அண்டார்டிக்கா பனிப்பாறைகள் உருகும் வீதம் மும்மடங்கு அதிகரித்துள்ளதாக புவியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1992 ஆம் ஆண்டு முதல் இன்று வரை அண்டார்டிக்காவில் 3 டிரில்லியன் பனி உருகியுள்ளதாம். இதனால் கடல் மட்டம் அதிகரித்து ஏற்படக் கூடிய சுனாமி போன்ற அலைகளால் உலகின் சிறிய தீவுகளும் கடற்கரையோர பிரதான வர்த்தக நகரங்களும் நீரில் மூழ்கும் ஆபத்து கூடி வருவதாக இது தொடர்பில் ஆய்வை மேற்கொண்ட 84 விஞ்ஞானிகள் அடங்கிய குழு தெரிவித்துள்ளது. மேலும் இந்த 3 டிரில்லியன் பனியில் 5 இல் 2 மடங்கு கடந்த 5 ஆண்டுகளில் மாத்திரம் உருகியுள்ளதால் தற்போது பனிப்பாறைகள் உருகும் வேகம் மும்மடங்கு அதிகரித்துள்ளது. உலகளாவிய ரீதியில் சர்வதேசம் பூகோள வெப்பமயமாவதலைக் கடுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய கட்டாயத்தை வலியுறுத்துகின்றது இந்த எச்சரிக்கை.

செயற்கைக் கோள்களினால் இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இதன் அடிப்படையில் அண்டார்டிக்காவில் 2012 வரை ஆண்டுக்கு 76 பில்லியன் டன் பனி உருகி வந்ததாகவும் தற்போது இது 3 மடங்கு அதிகரித்து ஆண்டுக்கு 219 பில்லியன் உயர்ந்து வருவதாகவும் கணிக்கப் பட்டுள்ளது. இப்படியே போனால் இந்த நூற்றாண்டு முடிவில் அண்டார்டிக்காவின் மொத்த பனியும் உருகிக் கரைந்து விடும் என்றும் அப்போது பூமியின் கடல் மட்டம் இன்றுள்ளதை விட 60 மீட்டர் அதாவது 210 அடி உயர்ந்து விடும் என்றும் கணிக்கப் பட்டுள்ளது.