உலகம்

ஜூன் 12 ஆம் திகதி வெற்றிகரமாக சிங்கப்பூரில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் டிரம்புடனான சந்திப்பை அடுத்து ரஷ்யா செல்லவுள்ளார் வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன் அழைப்பை ஏற்று செப்டம்பரில் கிம் ரஷ்யா செல்லவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்யப் பயணத்தின் போது அதிபர் கிம் அமெரிக்க அதிபருடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்தும் புதினுடன் விவாதிப்பார் என எதிர் பார்க்கப் படுகின்றது. முக்கியமாக அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையின் பின்னர் கிம் கொரியத் தீபகற்பத்தில் பூரண அணுவாயுதப் பகிஷ்கரிப்புக்கு உடன்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அமெரிக்காவுடன் சுமுகமாக நடந்து முடிந்த பேச்சுவார்த்தையை அடுத்து வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என ஐ.நா இற்கான ரஷ்யத் தூதுவர் ஐ.நா சபைக்கு வியாழக்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளார். இம்மாத இறுதியில் இது தொடர்பான விவாதம் ஐ.நா பாதுக்காப்புச் சபையில் இடம்பெறும் என எதிர் பார்க்கப் படுகின்றது. மேலும் கிம் உடனான சந்திப்பின் பின்னர் டிரம்ப் கருத்துத் தெரிவிக்கையில் அணுவாயுதங்களை வடகொரியா முற்றிலும் அழித்த பின்னரே அதன் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்குவது பற்றி முடிவெடுக்கப் படும் என்று தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.