உலகம்

பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் 2012 ஆம் ஆண்டு மலாலா யூசுஃப் சாய் இனைத் தலையில் சுட்டவனும் பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடையவனுமான பாகிஸ்தான் தலிபான் அமைப்பின் தலைவன் என்று கருதப் படும் ஃபஸ்லுல்லா என்பவன் அமெரிக்க டிரோன் விமானத் தாக்குதலில் கொல்லப் பட்டு விட்டதாக வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா ஊடகத்துக்கு அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஏற்கனவே 2010 ஆம் ஆண்டு முதல் 4 தடவைகள் இந்நபர் கொல்லப் பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகி இருந்த போதும் அவை நம்பகத் தன்மை அற்றுப் போயிருந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்வாட் பள்ளத்தாக்கில் ரகசியமாக ஒரு வானொலி சேவையை இவன் நடத்தி வந்ததால் முல்லா ரேடியோ என்றும் இவர் அடையாளம் காணப் படுகின்றார். ஜூன் 13 ஆம் திகதி முதல் ஆப்கான் பாகிஸ்தான் எல்லையிலுள்ள குனார் மாகாணத்தில் அமெரிக்கப் படைகள் தீவிரவாத எதிர்ப்பு வான் தாக்குதலை மேற்கொண்டனர். இதன் போதே ஃபஸ்லுல்லா கொல்லப் பட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு பெஷவாரில் பாகிஸ்தான் இராணுவப் பள்ளி மீது தலிபான் தீவிரவாதிகள் தொடுத்த தாக்குதலில் 130 சிறுவர்கள் உட்பட 151 பேர் கொல்லப் பட்ட மோசமான தீவிரவாதத் தாக்குதலை ஃபஸ்லுல்லா வழிநடத்தி இருக்கலாம் என்றும் கருதப் படுகின்றது.