மெக்ஸிக்கோவில் இருந்து அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக நுழைபவர்களைத் தடுக்கும் அமெரிக்காவின் கடுமையான சட்ட திட்டங்களால் கடந்த 6 வாரங்களில் மாத்திரம் அமெரிக்க எல்லையில் சுமார் 2000 குழந்தைகள் பெற்றோரைப் பிரிந்துள்ள பரிதாப நிலை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மெக்ஸிக்கோவில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழைய எத்தனிக்கும் பருவ வயது கடந்தவர்கள் கைது செய்யப் படுவர் என அமெரிக்க அதிபர் கடும் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளதால் கைதாவர்கள் உடன் வரும் குழந்தைகள் வலுக்கட்டாயமாகப் பிரிக்கப் பட்டுள்ளனர். இப்பிரச்சினை அமெரிக்க அரசியல் அவதானிகளால் கடும் விமரிசனத்துக்கு உள்ளாகியுள்ளது. ஏப்பிரல் 19 முதல் மே 31 ஆம் திகதி வரை கைதான 1940 வயது வந்தவர்களிடம் இருந்து 1995 குழந்தைகள் பிரிக்கப் பட்டுள்ளதாக புள்ளி விபரம் கூறுகின்றது. இவ்வாறு பிரிக்கப் பட்டவர்களது வயது விபரம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
பிரிக்கப் பட்ட குழந்தைகள் அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவைப் பிரிவின் பராமரிப்பின் கீழ் விடப் பட்டுள்ளனர். அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் உள்ள குடியரசுக் கட்சியின் சிலர் இதற்கு ஆதரவளித்தும் இன்னும் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தும் உள்ளனர்.