உலகம்
Typography

இஸ்ரேல் விவகாரத்தில் பக்கச் சார்பாக நடந்து கொள்வதாகவும் மனித உரிமைகள் தொடர்பான விவகாரங்களில் தன்னிச்சையாக நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டி UNHR என்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து அமெரிக்கா விலகியுள்ளது.

இக்குற்றச்சாட்டினை அமெரிக்க மாநிலச் செயலாளர் மைக் பொம்பேயோ முன் வைத்ததுடன் UNHR இலிருந்து விலகுவதாக ஐ.நா இற்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹலே செவ்வாய்க்கிழமை உறுதிப் படுத்தினார்.

மேலும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தை சீர்திருத்தும் அமெரிக்காவின் முயற்சிகளை ரஷ்யா, சீனா, கியூபா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் இணைந்து தவிடுபொடியாக்கி விட்டதாகவும் அமெரிக்கா இந்த அறிவிப்பின் போது தெரிவித்துள்ளது. ஏற்கனவே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அரசியல் இலக்குகள் காரணமாக ஐ.நா இன் காலநிலை ஒப்பந்தம் மற்றும் யுனெஸ்கோ (UNESCO) அமைப்பில் இருந்தும் அமெரிக்கா விலகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

2006 ஆமாண்டு சர்வதேச நாடுகளில் நடைபெறும் பல்வேறு விதமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஐ.நா சபையினால் UNHR தாபிக்கப் பட்டது. அதன்போது அதிபர் ஜோர்ஜ் W புஷ் உம் நம்பிக்கை இன்மையால் அவ்வமைப்பில் இணையவில்லை. ஆனால் பின்பு அதிபர் பாரக் ஒபாமா தலைமையில் அமெரிக்கா 2009 இல் இந்த அமைப்பில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS