உலகம்

மெக்ஸிக்கோ எல்லையில் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப் பட்டு டெக்ஸாஸில் தங்க வைக்கப் பட்டுள்ள அகதிக் குழந்தைகளைப் பார்வையிட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் துணைவியார் மெலானியா டிரம்ப் சென்றிருந்தார்.

இதன் போது அவர் அணிந்திருந்த ஆடையால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அதாவது அந்த ஆடையில் 'I really don't care, do u?' என அதாவது எனக்கு உண்மையில் அக்கறையில்லை, உங்களுக்கு? என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

இந்த ஜேக்கட் குறித்து மெலானியாவின் பேச்சாளர் ஸ்டெபனியே க்ரிஷாம் இடம் வினவப் பட்ட போது அவர் இது ஒரு சாதாரண ஜேக்கட். இதில் எந்த மறைமுக செய்தியும் கிடையாது. இன்றைய முக்கியத்துவம் வாய்ந்த டெக்ஸாஸ் விஜயத்தின் பின்பு அவரின் ஆடையில் என்ன எழுதியிருந்தது என்பது ஊடகத்தின் முக்கிய நோக்கமாக இருக்காது என நான் நம்புகின்றேன் என்று பதில் அளித்துள்ளார். விரைவில் இது குறித்து அதிபர் டிரம்ப் டுவீட் செய்திருந்தார். அதில் அவர் மெலானியாவின் ஜேக்கட் பின்புறம் எழுதியிருந்தது என்னவென்பது தான் பொய்யான தகவல்கள் பரப்பும் ஊடகங்களின் செய்கை ஆகும். அதாவது இந்த ஊடகங்கள் எந்தளவு நேர்மையற்றவை என்பதை மெலானியா கண்டு கொண்டுள்ளார் என்பதால் உண்மையில் அவருக்கு அது குறித்து அக்கறை இல்லை என்று கூறியுள்ளார்.

வியாழக்கிழமை டெக்ஸாஸில் சுமார் 55 அகதிக் குழந்தைகளைப் பராமரிக்கும் Upbring New Hope Children's Center என்ற நிலையத்துக்கு நேரில் சென்று குறித்த குழந்தைகளை மெலானியா பார்வையிட்டு அவர்களது கண்காணிப்பு குறித்து அறிந்து கொண்டார்.