உலகம்

சிம்பாப்வேயின் புலவாயோ நகரில் உள்ள வைட் சிட்டி மைதானத்தில் அந்நாட்டு அதிபர் எமர்சன் முனங்காக்வா பங்குபற்றிய தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் சனிக்கிழமை குண்டு வெடிப்புத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதில் மூத்த அதிகாரிகள் மற்றும் பாதுகாவலர்கள் பலர் காயம் அடைந்துள்ள போதும் அதிபர் காயமின்றி உயிர் தப்பியிருப்பதாக அவரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சிம்பாப்வேயினைப் பல தசாப்தங்களாக ஆண்டு வந்த முன்னால் அதிபர் ராபர்ட் முகாபே பதவியில் இருந்து நீக்கப் பட்ட பின் கடந்த ஆண்டு நவம்பரில் தான் முனங்காக்வா பதவியேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜூலை 30 ஆம் திகதி சிம்பாப்வேயில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக அவர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார். இவ்வேளையில் அதிபரைக் கொல்ல 5 ஆண்டுகளில் பல முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டதாக அவரின் செய்தித் தொடர்பாளர் ஜோர்ஜ் சரம்பா தெரிவித்துள்ளார்.

இக்குண்டுவெடிப்புத் தாக்குதலில் துணை அதிபர் கெம்போ மொகாதிக்கு காலில் காயம் ஏற்பட்டதாக உறுதிப் படுத்தப் படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் சனிக்கிழமை எத்தியோப்பியாவில் புதிதாக பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள அபி அகமது என்பவர் கலந்து கொண்ட பேரணியில் குண்டு வெடித்தது. இதில் பலர் கொல்லப் பட்டதாகத் தெரிய வருகின்றது. எத்தியோப்பிய தலைநகரில் உள்ள மெஸ்கெல் சதுக்கத்தில் ஆயிரக் கணக்கான மக்கள் பங்கேற்றிருந்த பேரணியில் வீசப் பட்ட கையெறி குண்டின் போதே இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. இத்தாக்குதலின் பின் உடனடியாக அபி அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்லப் பட்டார்.

எத்தியோப்பியாவின் புதிய பிரதமராக அபி அகமது பதவியேற்ற பின் பல்வேறு சீர்திருத்தங்களை அங்கு கொண்டு வருவார் என்று பொது மக்களால் எதிர் பார்க்கப் பட்டுள்ள வேளையில் இந்த குண்டு வெடிப்புத் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ஒருவர் பலியாகியும் 155 பேர் படுகாயம் அடைந்தும் உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.