உலகம்
Typography

உலகிலேயே பெண்கள் வாகனம் ஓட்டுவதற்குத் தடை விதிக்கப் பட்டிருந்த ஒரே நாடாக இதுவரை காலமும் விளங்கி வந்த சவுதி அரேபியாவில் அத்தடை நீக்கப் பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பு செப்டம்பரில் அறிவிக்கப் பட்டு கடந்த மாதம் முதல் முறைப்படி ஓட்டுனர் உரிமங்கள் வழங்கப் பட்டு வந்தன. இந்நிலையில் சனி நள்ளிரவு பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான தடை முற்றாக நீக்கப் பட்டுள்ளது.

முன்னதாக பெண்களின் வாகனம் ஓட்டும் உரிமைக்காகப் பாடுபட்ட கிட்டத்தட்ட 8 பெண்ணுரிமை செயர்பாட்டாளர்கள் கைது செய்யப் பட்டு தீவிரவாதத்துக்கு எதிரான நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்டு பல ஆண்டு சிறைத் தண்டனை அளிக்கப் படலாம் என ஆம்னெஸ்டி அமைப்பு தெரிவித்திருந்தது. மேலும் தலைநகர் ரியாத்தில் கார் ஓட்டியதற்காக பத்துக்கும் அதிகமான பெண்கள் கைது செய்யப் பட்டதும் கடந்த காலத்தில் நடந்தது உண்டு. இந்நிலையில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான தடை உத்தரவு நீக்கப் பட்டதை சவுதியில் இலட்சக் கணக்கான பெண்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். விரைவில் பல ஆயிரக் கணக்கான சவுதி பெண்கள் நாடெங்கிலும் வாகனம் ஓட்டக் கூடிய காட்சியை வீதிகளில் காண முடியும்.

மேலும் இத்தடை உத்தரவு நீக்கப் பட்டதை அடுத்து முதன் முறையாக சவுதியைச் சேர்ந்த அசீல் அல் ஹமாத் என்ற பெண்மணி அபுதாபியில் பார்முலா ஒன் காரை ஓட்டிச் சாதனை படைத்தும் உள்ளார். மேலும் இந்த தடை உத்தரவு நீங்கியதை அடுத்து இதன் பிரதி விளைவாக சவுதி அரேபியாவில் 2030 ஆம் ஆண்டுக்குள் $90 பில்லியன் டாலர்கள் வரை பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் கணிப்பிடப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்குக் காரணமாக இத்தடை உத்தரவு நீங்கினால் பெண்களுக்கான வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் இதனால் ஒட்டுமொத்த வருமானமும் வெளிப்பாடும் அதிகரிக்கும் என்றும் டுபாயைத் தளமாகக் கொண்டுள்ள பிரதான பொருளியலாளரான ஷியாட் தாவுத் என்பவர் தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்