உலகம்
Typography

சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் தலிபான்களின் தலைவர் முல்லா ஃபஷ்லுல்லாஹ் கொல்லப் பட்டு விட்டதாக ஆப்கான் அரசால் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டது.

இதையடுத்து பாகிஸ்தானில் இயங்கி வரும் தலிபான் அமைப்பு தமது இயக்கத்துக்கு புதிய தலைவனைத் தேர்ந்தெடுத்துள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

இவ்வாறு தேர்ந்தெடுக்கப் பட்ட புதிய தலைவன் முப்தி நூர் வலி மஹ்சூத் என்றும் துணைத் தலைவர்கள் முப்தி மசீம், அகா முப்தி ஹஃப்ஜுல்லா ஆகியோர் என்றும் தலிபான்களால் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஜூன் 14 ஆம் திகதி ஆப்கானிஸ்தானின் கிழக்கு குனார் மாகாணத்தில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகே அமெரிக்கப் படைகளால் முன்னெடுக்கப் பட்ட தீவிரவாத எதிர்ப்பு டிரோன் விமானத் தாக்குதலில் ஃபஷ்லுல்லஹ் கொல்லப் பட்டு விட்டதாக ஆப்கான் அதிபர் அஷ்ரஃப் கனி உறுதிப் படுத்திய போதும் இந்தத் தாக்குதல் வெற்றிகரமாக அமையவில்லை என்றே அமெரிக்கா தெரிவித்திருந்தது.

ஆனால் ஃபஷ்லுல்லாஹ் இன் மரணத்தை தலிபான்கள் அமைப்பும் உறுதி செய்துள்ளது. அமைதிக்கான நோபல் பரிசை மிக இளம் வயதில் வென்ற பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுவர் சிறுமியரின் கல்வி உரிமைக்கான போராளியான மலாலா யூசுஃப்சாயினை முன்னதாக ஸ்வாட் பள்ளத்தாக்கில் வைத்து தலையில் சுட்ட தலிபான் போராளியை வழிநடத்தியது இந்த ஃபஷ்லுல்லாஹ் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர 2014 டிசம்பரில் பாகிஸ்தான் பெஷாவர் இராணுவப் பள்ளியில் 100 பள்ளி மாணவர்கள் உட்பட 150 இற்கும் மேற்பட்ட பொது மக்களை சுட்டுக் கொன்ற வெறிச் செயலுக்குப் பின்பும் இந்த ஃபஷ்லுல்லாஹ் இன் தெஹ்ரிக் ஏ தலிபான் TTP என்ற அமைப்பே காரணமாக இருந்தது என்பதும் முக்கியமானது.

BLOG COMMENTS POWERED BY DISQUS