உலகம்

தென்சீனக் கடற்பரப்பில் இருந்து ஒரு இஞ்சினைக் கூட நாம் விட்டுக் கொடுக்க மாட்டோம் என சீன அதிபர் ஜீ ஜின்பின் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஜேம்ஸ் மேத்தீஸ் இடம் காட்டமாகாத் தெரிவித்துள்ளார்.

தென்சீனக் கடற்பரப்பில் தனது இராணுவ பலத்தினை சீனா அதிகரித்து வரும் நிலையில் சீனா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் சீன அமெரிக்க இருதரப்பு உறவிலும் அழுத்தம் அதிகரித்து வருகின்றது.

ஏற்கனவே அமெரிக்கா மற்றும் சீனா இடையே இடம்பெற்று வரும் வர்த்தகப் போர் காரணமாக இரு நாட்டுக்கும் இடையே விரிசல் பெரிதாகி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தென்சீனக் கடற்பரப்பில் சீனா சொந்தம் கொண்டாடி வரும் பகுதிகளில் அமெரிக்கா தனது வான் மற்றும் கடல் வழியாக சீரான இடைவெளிகளில் இராணுவ ரோந்து நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றது. இதுவும் சீனாவின் கோபத்தை அதிகரித்துள்ளது. புதன்கிழமை மேத்தீஸ் உடனான சந்திப்பின் போது ஜீ ஜின்பின் கருத்துத் தெரிவிக்கையில் பசுபிக் சமுத்திரம் கூட அமெரிக்கா, சீனா மற்றும் ஏனைய நாடுகளால் பாவிக்கப் படக் கூடிய மிகப் பரந்த பரப்பளவைக் கொண்டுள்ளது என்றுள்ளார்.

மேலும் தென்சீனக் கடற்பரப்பு விவகாரம் தொடர்பான பசுபிக் சமுத்திர நாடுகளால் முன்வைக்கப் படும் முரண்பாடுகள் ஒரு புறம் இருந்தாலும் இப்பிரச்சினையை இராணுவத்தைப் பயன்படுத்தி ஒருபோதும் தீர்த்து விட முடியாது என்றும் ஜின்பிங் தெரிவித்துள்ளார். தென்சீனக் கடலின் முக்கிய சில பகுதிகளை வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புரூனே மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் இக்கடற்பரப்பு உலக வர்த்தகத்தின் பிராந்திய முக்கியத்துவம் மிக்க கடல் வழி வணிக மார்க்கமாக இருப்பதே ஆகும்.