உலகம்
Typography

blood moon எனப்படும் இரத்தச் சிவப்பு சந்திர கிரகணம் அதிலும் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய மற்றும் மிக நீண்ட சந்திர கிரகணம் இன்னும் ஒரு மாதத்தில் அதாவது ஜூலை 27 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இதனை ஆவலுடன் கண்காணிக்க வானியலாளர்களும் பொது மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். பூரண சந்திர கிரகணம் மாத்திரம் 1 மணித்தியாலம் 43 நிமிடங்கள் நீடிக்குமாம்.

இந்த சந்திர கிரகணம் ஆரம்பித்து நிறைவு பெறும் வரை கிட்டத்தட்ட 4 மணித்தியாலம் வானத்தில் அழகிய காட்சியாகத் தென்படவுள்ளது. துரதிர்ஷ்ட வசமாக இந்த சந்திர கிரகணத்தை வட அமெரிக்கர்களால் பார்வையிட முடியாது. ஆனால் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, தெற்காசியா மற்றும் இந்து சமுத்திரத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வெற்றுக் கண்களால் சாதகமான காலநிலை அதாவது தெளிவான வானம் இருந்தால் பூரணமாகக் கண்டு களிக்கலாம். இதனை நாசாவின் நிலவுத் துறை சார்ந்த விஞ்ஞானி நோவாஹ் பெட்ரோ என்பவர் உறுதிப் படுத்தியுள்ளார்.

இவர் மேலும் கூறுகையில் சூரிய கிரகணம் போன்றல்லாது சந்திர கிரகணத்தை வெற்றுக் கண்களால் பார்ப்பது ஆபத்தில்லை என்றாலும் ஒரு தொலைக் காட்டியால் அல்லது பைனாகுலார் இனால் பார்த்தால் மிகப் பரந்த அழகிய காட்சி கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். பொதுவாக சூரிய கிரகணத்தின் போது சூரியன் சந்திரனின் நிழலால் மறைக்கப் படுகையில் அது பூரண கிரகணம் எனில் இருண்டு விடும். ஆனால் பூரண சந்திர கிரகணத்தின் போது சந்திரன் பூரணமாக இருண்டு விடுவதில்லை. பதிலாக சூரியக் கதிர்கள் பூமியின் வளிமண்டலத்துக்குள் புகுந்து வளைந்து சந்திரனின் மேற்பரப்பை சென்றடைவதால் அது கிரகணத்தின் போது சிவப்பு நிறத்தில் தென்படுகின்றது.

இந்தப் பூரண சந்திர கிரகணம் ஜுலை 27 ஆம் திகதி 4.21 pm GMT நேரத்துக்கு இடம்பெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS