உலகம்
Typography

2013 ஆம் ஆண்டு ஏற்கனவே வடக்கு பிரான்ஸின் ஒரு சிறைச் சாலையில் இருந்து டைனமைட் பாவித்து சுவரைத் தகர்த்துத் தப்பிச் சென்ற ரெடொயின் ஃபாயிட் என்ற பிரான்ஸின் மிக வேண்டப் படும் திருடன் மீண்டும் ஒரு முறை ஹாலிவுட் திரைப்படப் பாணியில் சிறையில் இருந்து தப்பி ஓடியுள்ளான்.

இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள பிரான்ஸ் அரசு அவனைத் தேடும் பணியை முடுக்கி விட்டுள்ளது.

மிகவும் மோசமான இந்த கேங்ஸ்டார் 'Scarface' என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் வரும் காட்சிகளைப் போன்றே நடைமுறையில் தப்பித்துச் சென்றுள்ளார். ஞாயிற்றுக்கிழமை மேலும் இரு சிறைக் கைதிகளின் உதவியுடன் ஸ்மோக் குண்டுகளையும் ஆங்கிள் கிரைன்டர்களையும் பாவித்து சிறையைத் தகர்த்து பொது மக்கள் பார்வையிடும் அறைக்குச் சென்ற ஃபாயிட் தனது சகோதரனுடன் தொலைபேசியில் பேசியுள்ளான். இச்சகோதரன் பின்பு போலிசாரால் கைது செய்யப் பட்டுள்ளார்.

பின்பு ஹைஜேக் பண்ணப் பட்ட ஹெலிகாப்டர் ஒன்று 10 நிமிடத்தில் வந்து சேர அதில் ஏறித் தப்பித்துச் சென்றுள்ளான் ஃபாயிட். இந்த ஹெலிகாப்டர் ஒரு மாணவனைக் கடத்தி அதன் மூலம் ஓட்டுனரைப் பயமுறுத்தி சிறைச்சாலை மேற்பகுதிக்கு காலை 11.15 மணிக்கு வரவழைக்கப் பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. இந்த சிறைத் தகர்ப்பு சம்பவத்தில் வார்டன் யாரும் காயமடையவில்லை என்பதுடன் அவர்கள் விரைந்து சென்று எச்சரிக்கை மணியை அடித்துள்ளனர். தற்போது பிரான்ஸ் முழுவதும் தேசிய அளவில் சுமார் 2900 போலிசாரும் பாதுகாப்புத் துறையினரும் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

பின்னதாக ஃபாயிட் தப்பிச் சென்ற ஹெலிகாப்டர் பாரிஸ் புறநகர்ப் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டதாகவும் உறுதிப் படுத்தப் படாத தகவகள் தெரிவிக்கின்றன. மிக மோசமான கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ள ஃபாயிட் 25 வருடம் சிறைத் தண்டனை அளிக்கப் பட்ட கைதி ஆவான்.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS