உலகம்
Typography

தாய்லாந்தின் மா சே என்ற நகரில் உள்ள தாம் லுவாங்க் என்ற 10 கிலோ மீட்டர் நீளமான குகைக்குள் இரு வாரங்களுக்கு முன்பு 11 தொடக்கம் 16 வயதுக்கு இடைப்பட்ட கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்களும் அவர்களது பயிற்சியாளர்களும் சென்ற போது கடும் மழை காரணமாக குகையை வெள்ள நீர் சூழ்ந்தது.

இதனால் தொடர்ந்து இரு வாரமாக இவர்களை மீட்கும் பணி மும்முரமாக இடம்பெற்று வருகின்றது. தற்போது இந்த மீட்புப் பணியில் தாய்லாந்து கடற்படை வீரர்கள் மட்டுமன்றி சீனா, மியான்மார், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சிறுவர்கள் சுவாசிப்பதற்காக ஏர் டேங்கிகள் பொருத்தும் போது எதிர்பாராத விதமாக சமான் குனான் என்ற மீட்புப் பணியாளர் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். இதனால் தாய்லாந்து மக்கள் சோகம் அடைந்துள்ளனர். மேலும் சமீப நாட்களாகப் பெய்து வரும் திடீர் மழை காரணமாகவும் மீட்புப் பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குகைக்குள் அகப்பட்ட மாணவர்களும் பயிற்சியாளர்களும் தமது குடும்பத்தினருக்குக் கடிதம் வரைந்துள்ளனர். மாணவர்கள் தமது கடிதத்தில் தாம் உறுதியான மன நிலையில் இருப்பதாகவும் கவலைப் பட வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். பயிற்சியாளரோ நடந்த சம்பவத்துக்காகத் தன்னை மன்னித்து விடுமாறு கோரியுள்ளார்.

இதேவேளை சர்வதேச கால்பந்து சம்மேளமான ஃபிபா அமைப்பின் தலைவர் கியான்னி இன்பாண்டினோ தாய்லாந்து கால்பந்து சங்கத் தலைவருக்குக் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில் அவர் குகையில் சிக்கிய 13 பேரும் விரைவில் உயிருடன் மீட்கப் படுவர் எனத் தான் நம்புவதாகவும் அதற்காகப் பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த 13 பேரும் மீட்கப் பட்டு குடும்பத்தினருடன் இணைந்ததும் அவர்கள் ஆரோக்கியமாக இருந்தால் ரஷ்யாவில் ஜூலை 15 ஆம் திகதி நடைபெறவுள்ள கால்பந்து இறுதிப் போட்டியினைக் காண வரலாம் என அழைப்பும் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS