உலகம்
Typography

தென்மேற்கு ஜப்பானின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் பெய்த தொடர் மழையால் குடியிருப்புக்களில் தண்ணீர் புகுந்து குராஷிகி மற்றும் ஒக்கியாமா பகுதிகள் பெரும் பாதிப்படைந்துள்ளன.

ஹிரோஷிமாவில் மோசமான நிலச்சரிவுகள் ஏற்பட்டு பல வீடுகள் இடிந்துள்ளன. இந்த கனமழை மற்றும் நிலச்சரிவுக்கு இதுவரை 20 பேர் பலியாகியும் 50 இற்கும் அதிகமானவர்கள் காணாமற் போயும் இருப்பதாகவும் நூற்றுக் கணக்கானவர்கள் வீடுகளை இழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப் படும் நிலையில் யமாகுஷி போன்று மோசமாகப் பாதிக்கப் பட்டுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பொது மக்கள் அகற்றப் பட்டு வருகின்றனர். இதேவேளை கனடாவில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதுவரை 54 பேர் பலியாகி உள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. மேற்கு கனடாவின் கடலோரப் பகுதிகளில் கடுமையான வெயில் சுட்டெரித்து வருகின்றது. இதனால் சில பகுதிகளில் காட்டுத் தீயும் ஏற்பட்டுள்ளது. மத்திய கனடாவில் மாண்ட்ரியல் நகரில் வெயில் சுட்டெரித்து வருகின்றது. இங்கு மாத்திரம் 28 பேர் கடும் வெயிலுக்குப் பலியாகி உள்ளனர். இவ்வாறு பலியானவர்களில் அதிகமானவர்கள் வயதான மற்றும் பலவீனமானவர்கள் என்று தெரிய வருகின்றது.

எனினும் கனடாவில் இயல்பு நிலை இன்னும் சில தினங்களில் திரும்பி விடும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மறுபுறம் ஜப்பான் தலைநகர் டோக்கியோ மற்றும் ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பம் பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் சனிக்கிழமை மாலை தாக்கியுள்ளது. இதனால் மோசமான உயிரிழப்புக்களோ சேதமோ ஏற்படவில்லை. மேலும் இந்நிலநடுக்கங்களால் ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS