உலகம்
Typography

கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக தாய்லாந்தில் குகைக்குள் அகப்பட்டிருக்கும் 12 காற்பந்தாட்ட சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்களில் தற்போது 4 சிறுவர்கள் பத்திரமாக மீட்கப் பட்டுள்ளதாக தாய்லாந்து அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்த மீட்பு நடவடிக்கைகளின் போது சிறுவர்களின் சுகாதாரமே முக்கிய விடயமாக எடுத்துக் கொள்ளப் பட்டதாகவும் இன்னும் 10 இலிருந்து 20 மணித்தியாலத்துக்குள் அடுத்த கட்ட மீட்புப் பணி தொடங்கும் எனவும் இவர்கள் மேலும் கூறியுள்ளனர்.

நேற்றிரவு தாம் லுவாங் குகையில் இருந்த முதல் இரு சிறுவர்களும் கிட்டத் தட்ட 4 Km நீளமான குறுகிய மோசமான பாதைகள் வழியேயும் சில நீரால் சூழப்பட்ட வழிகள் ஊடாகவும் டுவிஸ்டிங் என்ற நேவிகேஷன் வழிமுறை மூலம் வெளியேற்றப் பட்டனர். இவர்கள் சென்ற அதே பாதையைப் பயன்படுத்தி இன்னும் இருவரும் வெளியே வந்து சேர்ந்தனர். பாதுகாப்பாக இவ்வாறு மீட்கப் பட்ட அனைத்து 4 சிறுவர்களும் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை முன்னால் தாய்லாந்து நேவி டைவர் ஆக்ஸிஜன் சிலிண்டர் நிறுவ சென்ற போது பலியானது இந்தப் பாதையில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மீட்புப் பணியில் 13 வெளிநாட்டு டைவிங் நிபுணர்களும் தாய்லாந்து நேவி SEAL அமைப்பின் 5 உறுப்பினர்களும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். எஞ்சியுள்ள சிறுவர்களில் 11 வயதான நீச்சலில் அனுபவம் மிகவும் குறைந்த சிறுவர்களும் இருப்பது சவாலாக உள்ளது. இந்த அனைத்து சிறுவர்களையும் பத்திரமாக மீட்கும் பணியானது அடுத்த வருடம் தாய்லாந்தில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஆளும் ஜுந்தா கட்சிக்கு செல்வாக்கு செலுத்தும் ஒரு விடயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இக்குகை அமைந்துள்ள பகுதியில் வடக்கு சியாங் ராய் மாகாணத்தில் ஞாயிறு முதற் கொண்டு எதிர்வரும் கிழமைகளில் புயல் வீசும் அபாயம் உள்ளதும் மீட்புப் பணிக்கு சிரமத்தை ஏற்படுத்தவுள்ளது. ஜூன் 23 ஆம் திகதி காற்பந்தாட்ட பயிற்சி முடிந்த பின் மியான்மார் எல்லையில் உள்ள இந்த தாம் லுவாங்க் குகைக்கு ஒரு சிறுவனின் பிறந்த நாளைக் கொண்டாட இக்குழு சாகசப் பயணம் மேற்கொண்ட போதே மோசமான காலநிலையால் வந்த வழி அடைபட உள்ளே சிக்கிக் கொண்டு விட்டனர்.

இந்நிலையில் தாம் லுவாங் குகைக்குள் அகப்பட்டுக் கொண்ட சிறுவர்களை மீட்கும் பணியில் தொழிநுட்ப உதவிக்கு எலொன் முஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உதவிக் கரம் நீட்டியுள்ளது சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. மறுபுறம் தாய்லாந்தில் 93 சுற்றுலாப் பயணிகள், 11 பணியாளர்கள் மற்றும் ஒரு வழிகாட்டி என 105 பேருடன் சென்ற படகு ஒன்று நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அனைவரும் நீரில் மூழ்கியதுடன் இதி 33 பேர் பலியாகி உள்ளனர். மீட்புக் குழுவினரால் ஏனைய பயணிகளும் இறந்தவர்களில் 21 பேரின் சடலங்களையும் மீட்கப் பட்டுள்ளன. இப்படகில் பயணித்த பெரும்பாலான மக்கள் சீனாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS