உலகம்
Typography

உலக நாடுகளுக்கு இடையே அண்மைக் காலமாக வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ஐரோப்பிய யூனியனுக்கான தனது இறக்குமதித் தீர்வை வரிகளை அமெரிக்கா இன்னும் உயர்த்தினால் முன்பு இருந்ததை விட ஐரோப்பா ஒன்றிணைந்து உறுதியாகச் செயற்படும் என பிரான்ஸ் நிதியமைச்சர் புருனோ லே மாயிரே ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

தெற்குப் பிரான்ஸின் ஐக்ஸ் என் என்ற மாகாணத்தில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் பேசும் போதே புருனோ லே மாயிரே இந்தக் கருத்தினைத் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது நாளை தீர்வை வரியில் ஏதும் அதிகரிப்பு ஏற்பட்டால் முக்கியமாக கார் வர்த்தகம் அல்லது கார்கள் மீது இவை விதிக்கப் பட்டால் எமது எதிர்வினை மிகவும் வலிமை மிக்கதாகவும் ஒன்றிணைந்ததாகவும் இருக்கும் என்றார். இதன் மூலம் ஐரோப்பா ஒரு ஒருங்கிணைந்த தன்னாட்சித் திறன் உடைய சக்தி என்பதை உலகும் அமெரிக்காவும் புரிந்து கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலக வர்த்தகப் போர் தற்போது இடம்பெற்று வருகின்றதா இல்லையா என்பது கேள்வியல்ல. உண்மையில் அது ஆரம்பித்து விட்டது என்று தான் கருத வேண்டும் என்றும் புருனோ தெரிவித்தார். வரலாற்றில் மிகப் பெரிய பொருளாதாரப் போரை ஏற்படுத்தக் கூடியதாகக் கருதப் படும் சீனப் பொருட்கள் மீதான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கூடுதல் வரிகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS