உலகம்

ஊழல் வழக்கில் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய முன்னால் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கைதாகி உள்ள நிலையில் பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் பகுதியில் வெள்ளிக்கிழமை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நடத்தப் பட்ட தாக்குதலில் 128 பேர் பலியாகி உள்ளனர்.

பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் 10 வருட சிறைத் தண்டனை விதிக்கப் பட்ட நவாஸ் ஷெரீஃப் இலண்டனில் இருந்து திரும்பியதும் கைது செய்யப் படுவதற்காக ஹெலிகாப்டர் மூலம் இஸ்லாமாபாத்துக்கு அழைத்துச் செல்லப் பட்டுள்ளார்.

அங்கு கடவுச் சீட்டுக்கள் பறிமுதல் செய்யப் பட்டு ராவல்பிண்டி சிறையில் நவாஸ் ஷெரீஃபும் அவரது மகள் மரியமும் அடைக்கப் பட்டுள்ளனர். தம்மீதான குற்றச்சாட்டை எதிர்த்து மேன் முறையீடு செய்ய நவாஸ் ஷெரீஃபுக்கு 10 நாட்கள் அவகாசம் உள்ள நிலையில் பாகிஸ்தானில் அவரது ஆதரவாளர்களால் பதற்ற நிலை நிலவுகின்றது. இந்நிலையில் பலுசிஸ்தான் மாகாண உள்துறை அமைச்சர் ஆகா உமர் புங்கல்ஷாய் அளித்த தகவலில் அம்மாநிலத்தில் தேர்தலில் போட்டியிடவிருந்த சிராஜ் ரைசானி உட்பட 45 பேர் மஸ்துங் குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்ததாகத் தெரிய வருகின்றது.

இது வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 2 ஆவது தேர்தல் வன்முறையாகும். ஏற்கனவே நவாஸ் ஷெரீஃபின் மகன் ஊழல் வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார். இந்நிலையில் லாஹூர் விமான நிலையத்துக்கு நவாஸின் வருகையை எதிர்பார்த்து கூடவிருந்த அவரது ஆளும் முஸ்லிம் லீக் கட்சியின் ஆதரவாளர்களைப் போலிசார் அப்புறப் படுத்தி பலரைக் கைதும் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஷரீபின் சகோதரர் சபாஷ் சரீஃப் தற்போது பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியைத் தலைமை தாங்கி நடத்தி வருவதுடன் ஜூலை 25 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்காகத் தற்போது பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகின்றார். தேர்தல் தினத்தில் பாதுகாப்புக்காக பாகிஸ்தான் முழுதும் 350 000 பாதுகாப்புப் படையினரை பணியில் ஈடுபடுத்த பாகிஸ்தான் தேர்தல் கமிசன் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் 4 பேரைப் பலி கொண்ட முதலாவது குண்டு வெடிப்பு வெள்ளிக்கிழமை பன்னு நகரில் தேர்தல் பேரணியில் இடம்பெற்றது. மேலும் 65 பேரைப் பலிகொண்ட 2 ஆவது குண்டு வெடிப்பு பலுசிஸ்தானின் மஸ்துங் பகுதியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இடம்பெற்றது. இதில் வேட்பாளர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி உள்ளார்.

தேர்தலுக்கு 12 நாட்கள் இருக்கும் போது ஏற்பட்டுள்ள இந்த வன்முறையும் உயிரிழப்புக்களும் பாகிஸ்தான் மக்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான தகவல் படி இக்குண்டு வெடிப்புக்களில் 133 பேர் பலியாகி உள்ளதாகவும் 180 பேருக்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

2014 ஆமாண்டுக்குப் பிறகு பாகிஸ்தானில் நடத்தப் பட்ட கோரமான தாக்குதல்களாகக் கருதப் படும் இக்குண்டு வெடிப்புத் தாக்குதல்களுக்கு ISIS தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.