உலகம்

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகண்டாவில் சமூக வலைத் தளங்கள் பயன்படுத்துவதற்கு வரி விதித்து அந்நாட்டு அரசு அண்மையில் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது.

கடந்த ஜூலை முதலாம் திகதி முதல் இணைய சேவை தவிர்த்து வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்ட பிற சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்த தினசரி 200 உகண்டா சில்லிங் வரி செலுத்த வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்தது.

இது அந்நாட்டு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் உகண்டா தலைநகர் கம்பாலாவில் ஆயிரக் கணக்கான பொது மக்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர். இதில் வன்முறை வெடித்த காரணத்தால் போராட்டக் காரர்கள் மீது உகண்டா காவற் துறை கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி அவர்களைக் கலைத்தனர். மேலும் புதிதாக அறிமுகப் படுத்தியிருக்கும் இந்த வரியானது நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்தவென்றே என உகண்டா அரசு தெரிவித்துள்ளது. இந்த வரி விதிப்பை முதலில் அறிவித்தது உகண்டாவை 1986 ஆம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வரும் சர்வாதிகாரம் மிக்க ஜனாதிபதியான யோவெரி முசுவெனி ஆவார்.

உகண்டாவின் மொத்த சனத்தொகையான 41 மில்லியனில் 17 மில்லியன் மக்கள் இணையத் தளத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் உகண்டா அரசின் இந்த அதிரடி வரி விதிப்பு உத்தரவானது அந்நாட்டு மக்களின் கருத்துச் சுதந்திரத்தை மீறும் செயல் என சர்வதேச மன்னிப்புச் சபையான Amnesty International அரசாங்கத்துக்கு வலியுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.