உலகம்
Typography

தாய்லாந்து நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களை மையமாகக்  கொண்டு வியாழன் மற்றும் வெள்ளிக்  கிழமைகளில்  நடத்தப் பட்ட தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதலில் 4 பேர் பலியாகியும் பலர் படுகாயம்  அடைந்தும் உள்ளனர். இந்தத் தாக்குதலுக்கும் தீவிரவாதத்துக்கும் தொடர்பில்லை எனவும் இது உள்ளூர் நாச வேலை எனவும் தாய்லாந்து  போலிசார் தகவல் அளித்துள்ளனர். 

மேலும் ஹுவா ஹின், புகெட் போன்ற சுற்றுலாப் பயணிகள் அதிகம்  செல்லும்  பகுதிகளில்  தொடர்ச்சியாக நடத்திய இக்குண்டு வெடிப்புக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவும் இல்லை. தற்போது இந்த இடங்கள் யாவிலும் அவசர நிலை பிரகடனப் படுத்தப் பட்டுள்ளதுடன் பொது மக்களை அமைதி காக்குமாறு தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ சா கேட்டுக் கொண்டுள்ளார். இராணுவத்தின் பின்புலத்துடனான அரசியல் கட்டமைப்புக்கு தாய்லாந்து மக்கள் வாக்களித்து சில நாட்களில் இந்த குண்டு வெடிப்புக்கள் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாய்லாந்தின் புக்கெட் தீவு தென் கிழக்கு  ஆசியாவிலேயே மிகப் பிரசித்தமான சுற்றுலாத் தீவும் ஆகும். இக்குண்டு  வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரை CCTV footage மூலம் அவதானித்து தாய்லாந்து போலிசார் கைது செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர். பொருளாதார வீழ்ச்சியால் தவித்து வரும் தாய்லாந்துக்கு இக்குண்டு வெடிப்பு சம்பவம் அதிர்ச்சியான ஒன்றே ஆகும்.  ஏனெனில் தாய்லாந்து பொருளாதாரத்தில் அதாவது GDP எனப்படும்  மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% வீதம் சுற்றுலாத்துறையில் தங்கியுள்ளது. மேலும் இவ்வருடம் தாய்லாந்து சுமார் 32 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்க்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS