உலகம்

லாவோஸின் அட்டபியூ மாகாணத்தில் தண்ணீர் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தில் தென்கொரிய நிறுவனத்தால் அணை ஒன்று கட்டும் பணி இடம்பெற்று வந்தது. இப்பணி நிறைவு பெற்ற பின் 2019 முதல் மின்சாரம் தயாரிக்கலாம் என்றும் திட்டமிடப் பட்டிருந்தது.

ஆனால் திங்கள் நள்ளிரவு திடீரென இந்த அணை உடைந்து ஏற்பட்ட விபத்தில் 5 பில்லியன் கியூபிக் மீட்டர் நீர் அணையில் இருந்து வெளியேறியது.

இதனால் அணைக்கு அண்மையில் அமைந்திருந்த குடியிருப்புப் பகுதிக்குள் நீர் புகுந்து வீடுகள் பல நீரில் அடித்துச் செல்லப் பட்டன. வெள்ளத்தின் வேகமும் வீரியமும் அதிகமாக இருந்ததால் சுமார் 6600 வீடுகள் வரை சேதமடைந்துள்ளன. நூற்றுக்கும் மேலான மக்கள் இதன் போது காணாமற் போயுள்ளனர். மேலும் உயிரிழப்பும் அதிகமாக இருக்கும் என அஞ்சப் படுகின்றது. ஆனாலும் இன்னும் கணக்கெடுப்பு நிறைவு பெறவில்லை. தற்போது மீட்புப் பணிகள் விரைந்து நடந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக லாவோஸில் பெய்து வரும் கனமழை காரணமாக அணையின் நீர் நிறைந்து அதன் சிறிய விநியோக அணையே உடைந்துள்ளதாகவும் பெரிய அணைக்குப் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் தென்கொரிய கட்டுமான நிறுவன செய்தித் தொடர்பாளர் பிபிசிக்குத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கிரீஸ் தலைநகர் ஏதென்ஸின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள பைன் மரக் காடுகளில் சனிக்கிழமை மதியம் இரு வேறு இடங்களில் ஏற்பட்ட கடும் காட்டுத் தீ குடியிருப்பு மற்றும் சுற்றுலாப் பகுதிகள் வரை மள மளவென பரவியது. இதில் பல வீடுகளும் எரிந்து நாசமானதுடன் திடீரென இத்தீ ஏற்பட்டதால் இதில் சிக்கி இதுவரை 60 பேர் பலியாகி உள்ளதாகவும் நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. 500 இற்கும் அதிகமான பொது மக்கள் பாதுகாப்பாக மீட்கப் பட்டுள்ளனர்.

இம்முறை இக்காட்டுத் தீயால் கிறீஸ் முற்று முழுதாக ஸ்தம்பித்துள்ளது. வீடுகள், விடுதிகள், வாகனங்கள் எனப் பல பொது மக்கள் உடைமைகள் தீயில் கருகி நாசமாகி உள்ளன. முக்கியமாக ஏதென்ஸை ஒட்டியுள்ள கடற்கரை நகரங்களான மத்தி, ரஃபினா மற்றும் கினேட்டா ஆகிய பகுதிகள் தான் காட்டுத் தீயால் தீவிரமாகப் பாதிக்கப் பட்டு பெருமளவு உயிர் சேதத்தையும் பொருட் சேதத்தையும் சந்தித்துள்ளன. தற்போது தீயை விரைந்து அணிக்கும் பணியில் 300 இற்கும் அதிகமான தீயணைப்பு வீரர்களும் 5 விமானங்களும் இரு ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப் பட்டுள்ளன.

இதற்கு முன்பு கிறீஸில் 10 வருடங்களுக்கு முன்பு 2007 ஆம் ஆண்டு உக்கிரமான காட்டுத் தீ ஏற்பட்டிருந்தது. அதன் போதும் 60 பேர் வரை பலியாகி இருந்தனர். இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள காட்டுத் தீ அனர்த்தத்தால் கிறீஸின் சில முக்கிய நெடுஞ்சாலைகளும் ரயில் தடங்களும் மூடப் பட்டுள்ளன. காட்டுத் தீயை விரைந்து அணைப்பதற்கும் நிவாரணப் பணிகளுக்கும் சர்வதேசத்தின் உதவியையும் நாடியுள்ளது கிறீஸ்.