உலகம்
Typography

பூமியில் எங்கெல்லாம் தண்ணீர் உள்ளதோ அங்கெல்லாம் உயிர் வாழ்க்கை இருப்பது நாம் அறிந்த விடயம்.

இதனால் தற்போது செவ்வாய்க் கிரக ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஏனெனில் செவ்வாயின் தென் துருவத்துக்கு கீழே 1.5 Km ஆழத்தில் 20 Km விட்டமுடையை மிகப் பெரிய உப்பு நீர் ஏரி ஒன்று இத்தாலிய விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

இதனால் அங்கு நுண்ணுயிர் வடிவிலான உயிர் வாழ்க்கைக்கான ஆதாரம் இருப்பதை ஊர்ஜிதப் படுத்த முடியும் எனப்படுகின்றது. 2003 டிசம்பர் 25 ஆம் திகதி முதல் செவ்வாயின் ஒழுக்கில் சுற்றி வரும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமான ESA இன் மார்சிஸ் எனப்படும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் செய்மதியின் ரேடார் கருவி மூலம் இந்த ஏரி கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. கிட்டத்தட்ட 4 வருட ஆராய்ச்சியின் பின் இந்த ஏரி கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. கடந்த இரு தசாப்தங்களாக செவ்வாய்க் கிரக ஆராய்ச்சியில் சர்வதேசம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் மார்ஸ் எக்ஸ்பிரஸ், ஸ்பிரிட் ரோவர், ஆப்பர்டுனிட்டி மற்றும் இஸ்ரோவின் மங்கல்யான் ஆகியவை செவ்வாய்க் கிரகத்தில் உயிர் வாழ்க்கைக்கு ஆதாரம் உள்ளதா என்பது குறித்து ஆய்வை மேற்கொண்டு வருகின்றன.

இதன் பயனாகத் தற்போது அங்கு தண்ணீர் இருப்பதற்கான தெளிவான ஆதாரம் நிரந்தரமான ஏரி ஒன்றின் மூலம் முதன் முறையாக கிடைத்துள்ளது. இதனால் அங்கு நுண்ணியிர் வடிவில் உயிர் வாழ்க்கை இருப்பதை உறுதிப் படுத்த முடியும். செவ்வாயின் தென் துருவத்துக்கு ஒப்பான பூமியின் தென் துருவத்தில் இது போன்று 400 இற்கும் அதிகமான ஏரிகள் உறைந்து போன அதன் மேற்பரப்பின் கீழ் காணப் படுகின்றன. இந்நிலையில் செவ்வாயின் தென் துருவத்தில் உள்ள இந்த தண்ணீர் ஏரியில் சிக்கலான கார்பன் மூலகத்தால் ஆன உயிர் வாழ்க்கை உள்ளதா என்பதற்கு ஆதாரம் இதுவரை கிடைக்கவில்லை.

மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாயில் பூமியை ஒத்த கடல்களும், ஆறுகளும் அருவிகளும் உயிர் வாழ்க்கையும் இருந்திருக்கலாம் என்றும் அதற்கான தடங்கள் இப்போது அதன் மேற்பரப்பில் காணப்படுவதாகவும் வானியலாளர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாளை ஜூலை 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் ஏற்படுகின்றது. அதாவது சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை மிகவும் நேர்த்தியான நேர்கோட்டில் நெருங்கி வருகின்றன. இதனால் 1 மணித்தியாலமும் 43 நிமிடமும் நீடிக்கவுள்ள இந்த சந்திர கிரகணம் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் பொது மக்களால் பார்க்கப் பட முடியும் என்று கூறப்படுகின்றது. மேலும் இந்த சந்திர கிரகணத்தின் போது சூரிய ஒளியானது பூமியின் வளிமண்டலத்தில் இருந்து தெறிக்கப் பட்டு சந்திரனை அடைவதால் அது இரத்தச் சிவப்பு நிறத்தில் (Blood Moon) தென்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்